ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு


ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்: மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிப்பு
x
தினத்தந்தி 20 Jun 2018 4:15 AM IST (Updated: 20 Jun 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

மாநிலம் முழுவதும் நேற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள்.

தமிழக சட்டசபையில் ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியிடாததை கண்டித்தும், பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டம், 100 நாள் வேலை திட்டம் போன்றவற்றை திணித்து, ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதை கண்டித்தும், ஊராட்சி செயலர்களுக்கு பதிவறை, எழுத்தர்களுக்கான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பேச்சுவார்த்தையின்போது அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை அரசாணைகளாக வெளியிடக்கோரி இந்த போராட்டம் நடந்தது.

அதன்படி குமரி மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் இறங்கினர். இதனால் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்கள் போன்றவையும் வெறிச்சோடி காணப்பட்டன.

இதனால் மாவட்டம் முழுவதும் 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் குடிநீர் வினியோகப் பணிகள், சுகாதாரப்பணிகள் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. நாகர்கோவில் கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகப் பணிகள் போன்றவை பாதிக்கப்பட்டன.

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் மொத்தம் உள்ள 410 பணியாளர்களில் 284 பேர் நேற்று பணிக்கு வரவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் நேற்றைய போராட்டத்தில் குமரி மாவட்டத்தில் 90 சதவீத ஊழியர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர்.

தக்கலை அருகே கோழிப்போர்விளை பகுதியில் அமைந்துள்ள தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 44 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் நேற்று 33 பேர் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி கிடந்ததோடு, பணிகளும் பாதிக்கப்பட்டது.

Next Story