ராய்காட் அருகே புதுமனை புகுவிழாவில் சோகம் விருந்து சாப்பிட்ட 3 குழந்தைகள் பலி 40 பேருக்கு தீவிர சிகிச்சை


ராய்காட் அருகே புதுமனை புகுவிழாவில் சோகம் விருந்து சாப்பிட்ட 3 குழந்தைகள் பலி 40 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 20 Jun 2018 4:00 AM IST (Updated: 20 Jun 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

ராய்காட் அருகே புதுமனை புகுவிழாவில் விருந்து சாப்பிட்ட 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் பலியானார்கள்.

மும்பை, 

ராய்காட் அருகே புதுமனை புகுவிழாவில் விருந்து சாப்பிட்ட 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் பலியானார்கள். மேலும் 40 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுமனை புகுவிழா

ராய்காட் மாவட்டம் காலாப்பூர் மகாட் பகுதியில் சுபாஷ் மானே என்பவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டின் புதுமனை புகுவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. விழாவில் சுமார் 500 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

இரவு நேரத்தில் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு மகாட் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து உணவு பரிமாறப்பட்டது.

வாந்தி, மயக்கம்

உணவை சாப்பிட்ட சில குழந்தைகளுக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் கொப்போலியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறிது நேரத்தில் அந்த உணவை சாப்பிட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பன்வெல், நவிமும்பையில் உள்ள எம்.ஜி.எம்., டி.ஒய். பாட்டீல் உள்ளிட்ட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

3 குழந்தைகள் பலி

இதில் பிரகதி (வயது12), கல்யாணி (7) ஆகிய சிறுமிகளும், ரித்திகேஷ் (12) என்ற சிறுவனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 40-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்றவர்கள் சிசிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர்.

போலீசார் விசாரணை

விருந்தில் பரிமாறப்பட்ட உணவில் விஷத்தன்மை வாய்ந்த பொருட்கள் தவறுதலாக விழுந்ததா? அல்லது யாரேனும் வேண்டும் என்றே விஷத்தை உணவில் கலந்தார்களா? என்ற கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விருந்தில் பரிமாறப்பட்ட உணவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

புதுமனை புகுவிழாவில் விருந்து சாப்பிட்ட 3 குழந்தைகள் பலியான சம்பவம் மகாட் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story