கூவத்தூர் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டி தரக்கோரி மறியல்


கூவத்தூர் கிராமத்தில் புதிய  பள்ளி  கட்டிடம்  கட்டி  தரக்கோரி  மறியல்
x
தினத்தந்தி 20 Jun 2018 3:09 AM IST (Updated: 20 Jun 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே கூவத்தூர் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டி தரக்கோரி மறியல் நடந்தது.

கல்பாக்கம், 

கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்களும் 62 மாணவர்களும் உள்ளனர். 

இந்த பள்ளி வளாகத்தில் ஒரு வகுப்பறை கட்டிடம் தற்போது உள்புறம் மேல்கூரை மற்றும் சுவர்களில் கீறல்கள் விழுந்தும் சிமெண்டு பெயர்ந்து விழுந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது. 

நடவடிக்கை இல்லை

மழை காலங்களில் இந்த கட்டிடத்தின் சுவர்களில் மின்சாரம் பாய்ந்து வருகிறது. ஆபத்தான இந்த பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் பள்ளியில் நடைபெற்றது. அப்போது பழைய கட்டிடத்தின் வெளிப்புறம் மேல்கூரை பெயர்ந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூர் பஸ் நிறுத்தம் அருகே திடீரென கூடினர். பள்ளி மாணவர்களும் அங்கு வந்தனர். 

சாலை மறியல்

புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் அடங்கா அன்பு தலைமையில் தே.மு.தி.க. லத்தூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி கோவிந்தசாமி உள்பட பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

பழுதடைந்த பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் அமைக்குமாறு அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். 

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜி, கொடூர் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்பட அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது பழுதடைந்த பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பல முறை காயமடைந்ததாகவும், அதன் காரணமாக தொடர்ந்து பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப முடியாமல் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

போக்குவரத்து பாதிப்பு

மேலும் அந்த கட்டிடத்தை நேரில் பார்வையிட வேண்டும் என பெற்றோர்கள் அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்று துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜி மற்றும் வருவாய் துறையினர் அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். 

விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் பெற்றோர்களிடம் உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

இதனால் சிறிது நேரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story