அயனாவரம் பகுதியில் கட்டிட கழிவுகள் அகற்றம்


அயனாவரம் பகுதியில் கட்டிட கழிவுகள் அகற்றம்
x
தினத்தந்தி 20 Jun 2018 3:25 AM IST (Updated: 20 Jun 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

அயனாவரம் பகுதியில் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி பாலம் முதல் அயனாவரம் சிக்னல் வரை உள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 153 குடியிருப்புகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. 

அதேபோல் கடந்த மே மாதம் 27–ந் தேதி அதே பகுதியில் 315 குடியிருப்புகள் அகற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து அயனாவரம் சிக்னல் அருகே அத்துமீறி கட்டியிருந்த 19 அடுக்குமாடி வீடுகளும் இடிக்கப்பட்டன. அவ்வாறு இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றாமல் அந்த பகுதிகளிலேயே சாலையோரமும், குடியிருப்புகளின் அருகாமையிலும் அப்படியே விட்டுச்சென்றதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். 

அகற்றப்படுகிறது

இந்த கட்டிட கழிவுகளால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி தூசுகள் பறந்து அருகில் உள்ள குடியிருப்புகளில் படிந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தைகள் முதல் முதியோர் வரை அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடந்த 8–ந் தேதி தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. 

அதன்படி அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர். சுமார் 5 ஆயிரம் டன் வரை உள்ள இந்த கட்டிட கழிவுகளை அகற்ற தனியார் நிறுவனம் மூலம் டெண்டர் விடப்பட்டு விரைவில் முழுமையாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி செந்தில்நாதன், உதவி பொறியாளர் சரஸ்வதி ஆகியோர் நேரடி மேற்பார்வையில் தனியார் நிறுவனம் மூலம் கட்டிட கழிவுகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

12 நாட்கள் ஆகும்

இதுகுறித்து திரு.வி.க. நகர் மண்டல அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தினமும் 8 லாரிகள் மூலம் ஒரு நாளைக்கு 400 டன் வரை அகற்றப்படுகிறது. இந்த கட்டிட கழிவுகளை முழுமையாக அகற்ற 12 நாட்கள் வரை ஆகும். இதில் ராட்சத விளக்குகள் பயன்படுத்தப்பட்டு குடியிருப்புவாசிகளுக்கு சத்தம் வராதபடி பணி செய்துவருகிறோம். இந்த கழிவுகள் கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன என்றனர். 

Next Story