ஒறையூர் சம்பவம்: இனி வன்முறையில் ஈடுபடமாட்டோம் பேச்சுவார்த்தையில் இருபிரிவினரும் உறுதி
ஒறையூரில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் அத்துமீறி அரசு பள்ளிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபடமாட்டோம் என்று இருபிரிவினரும் உறுதி அளித்தனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே ஒறையூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 13-ந் தேதி ஒறையூர் காலனியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மீது மாணவர்கள் சிலர் மாங்கொட்டை வீசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திர மடைந்த ஒறையூர் காலனியை சேர்ந்த சிலர் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து ஒறையூர் கிராமத்தை சேர்ந்த மாணவர்களை தாக்கினர்.
இதை தடுத்த ஆசிரியர்கள் மீதும் அடி விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் சேட்டு கொடுத்த புகாரின் பேரில் ஒறையூர் காலனியைச் சேர்ந்த 28 பேர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28 பேர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ்பெறக்கோரியும், பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரியும், பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரியும் ஒறையூர் காலனியை சேர்ந்தவர் கள் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே பள்ளிக்குள் புகுந்து தாக்கிய 28 பேரையும் உடனடியாக கைது செய்யக்கோரி ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மாணவ-மாணவிகளுடன் பள்ளி அருகில் மறியலில் ஈடுபட்டனர். இருபிரிவினரும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒறையூரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்றும் ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவில்லை. இதையடுத்து இருபிரிவினரையும் அமைதி பேச்சுவார்த்தைக்காக பண்ருட்டி தாலுகா அலுவலகத்திற்கு தாசில்தார் அழைத்தார்.
அதன்படி இருபிரிவினரும் நேற்று காலையில் பண்ருட்டி தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சேட்டு, பண்ருட்டி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணா, ஒறையூர் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், வீரப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜானகிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் இருபிரிவினரும் தங்களது கருத்தினை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம் பேசியதாவது:-
இருபிரிவினரும் சமாதானமானதை அடுத்து 20-ந் தேதி(இன்று) முதல் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது.
ஒறையூர் காலனியில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கும், பொதுப்பிரிவினரை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும் பிரச்சினை ஏற்படாதவாறு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டதை இருபிரிவினரும் ஏற்றுக்கொண்டனர்.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என இருபிரிவினரும் உறுதி அளித்துள்ளனர். மேலும் இதுபோன்ற செயல்கள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரை அழைத்து பேசுவது என்றும், அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபடமாட்டோம் என்றும் இருபிரிவினரும் உறுதி அளித்துள்ளனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் ஒறையூர் காலனியை சேர்ந்த 5 பேரை உறுப்பினர்களாக சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story