மருத்துவ படிப்பில் சேர 44 ஆயிரம் பேர் விண்ணப்பம் கலந்தாய்வு ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது
மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வுக்கு 44 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வு ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது.
சென்னை
தமிழகத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவசேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்கள் உள்ளன. மேலும் 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 784 இடங் கள் உள்ளன. இதேபோல் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள் 11 உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர பல்மருத்துவ இடங்கள் 1,020 உள்ளன.
இந்த இடங்களில் சேர தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள அரசு பல்மருத்துவ கல்லூரியிலும் விண்ணப்பங்கள் வழங்கும் பணி கடந்த 11–ந்தேதி தொடங்கியது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் அந்த பிரிவினர்
அல்லாத மாணவ–மாணவிகளுக்கு விண்ணப்பங்கள் ரூ.500 ஆகும். தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பம் ரூ.1,000. இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.
44 ஆயிரம் விண்ணப்பங்கள்
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை–10 என்ற முகவரிக்கு அனுப்ப நேற்று கடைசி நாள் ஆகும். அவ்வாறு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்டு வந்து சேர்ந்தன.
தரவரிசை பட்டியல் 28–ந்தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1–ந்தேதி முதல் 10–ந்தேதி வரை நடக்கிறது.
Related Tags :
Next Story