வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று


வாகன எரிபொருளாக வரப்போகிறது காற்று
x
தினத்தந்தி 20 Jun 2018 11:04 AM IST (Updated: 20 Jun 2018 11:04 AM IST)
t-max-icont-min-icon

இன்றைய நாகரிக உலகில் தொழிற்சாலைகளாலும், போக்குவரத்து வாகனங்களினாலும் கரும்புகை வெளியேற்றம் அதிகமாக இருக்கிறது.

காற்றில் அதிகமாக கலந்து விடும் கார்பன்-டை-ஆக்சைடால் பூமி வெப்பமடைந்து சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கிறது.

காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்சைடை குறைக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை அகற்றும் தொழில்நுட்பம் அறிவியல் உலகிற்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. வளிமண்டலத்திலிருந்து நேரடியாக கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சக்கூடிய ‘டைரக்ட் ஏர் கேப்ட்சர்’ முறையை அறிவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து பல காலமாக முயன்று வருகிறார்கள்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னரும் இங்கிலாந்து நிறுவனம் ஒன்று காற்றிலிருந்து பெட்ரோல் உருவாக்கும் முறையொன்றை வெளியிட்டது. அது வணிக அளவில் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரவில்லை.

கனடாவின் தூய்மை எரிசக்தி நிறுவனமான ‘கார்பன் என்ஜினீயரிங்’ என்ற ஆய்வு நிறுவனமும், அறிவியல் ஆய்வுகளில் உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களும் இணைந்து, கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுக்கு பின்னர் ஒரு புதிய முறையை கண்டறிந்துள்ளனர். அது சமீபத்திய ‘ஜூல்’ அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முறையில் ஆய்வகப் பரிசோதனை முறையை போன்று அல்லாது, தொழிற்சாலை உற்பத்தி முறையில், மிகப் பெரிய அளவில் வெற்றிகரமாக காற்றிலிருந்து வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளை உற்பத்தி செய்யமுடியும் என்றும், அதுவும் மிக மலிவான செலவில் சாத்தியம் என்றும் நிரூபித்து காட்டி உள்ளனர்.

இப்போது வடிவமைக்கப்பட்டுள்ள ஆலையொன்றை ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சும் அளவுக்கு விரிவாக்கும் வசதியுள்ளதாகப் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்.

இதனால் உறிஞ்சப்படும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவானது 2½ லட்சம் வாகனங்கள் வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்சைடை காற்றிலிருந்து நீக்குவதற்கு இணையானது. இந்த முறை, காற்றில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை இயற்கையாக தாவரங்கள் அகற்றுவது போன்றதுதான். ஆனால் இம்முறையில் பன்மடங்கு அளவில் கார்பன்-டை-ஆக்சைடு உறிஞ்சப்படுகிறது.முதலாவதாக, காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சும் ஆலையொன்றின் வழியாக, காரத்தன்மைகொண்ட ஹைட்ராக்சைடு திரவத்தின் உதவியுடன் கார்பன்-டை-ஆக்சைடு பிரித்தெடுக்கப்பட்டு, கார்பனேட் திரவமாக மாற்றப்படும். பிறகு அந்த திரவம் சுத்திகரிக்கும் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது.

பிறகு, கால்சியம் ஆக்சைட் கொண்ட திரவத்துடன் சேர்க்கப்பட்டு கால்சியம் கார்பனேட் வில்லைகளாக மாற்றப்பட்டு உலர வைக்கப்படுகிறது. அடுத்து, சுத்திகரிப்பு முறையில் இந்த கால்சியம் கார்பனேட் வில்லைகள் சூடாக்கப்பட்டு கால்சியம் ஆக்சைடு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடாக சிதைக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட கால்சியம் ஆக்சைடு நீருடன் கலக்கப்பட்டு மீண்டும் மறுசுழற்சி முறையில் கால்சியம் கார்பனேட் வில்லைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வேதியல் வினைகளில் பயன்படுத்தப்படும் காரத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் ஆவியாகாது. மேலும் நச்சுத்தன்மையும் அற்றவை. இவை சில உணவு தயாரிக்கும் முறையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களே.

காற்றாலை வழியே கார்பன்-டை-ஆக்சைடு உறிஞ்சப்படும் முறையும் கால்சியம் ஆக்சைடுடன் சுத்திகரிக்கப்படும் முறையும் தற்போது காகிதத் தொழிற்சாலைகளில் பயன்படும் ஒரு தொழில்நுட்பமுறையே.

இறுதியாக, கார்பன்-டை-ஆக்சைடு ஹைட்ரஜனுடன் இணைந்து, திரவ எரிபொருளாக மாற்றப்பட்டு வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய திரவ ஹைட்ரோகார்பனாக மாற்றப்படுகிறது.

இம்முறையில் வளிமண்டலத்தில் இருந்து ஒரு டன் கார்பன்-டை-ஆக்சைடை 100 அமெரிக்க டாலருக்கும் குறைவான செலவில் அகற்ற முடியும். முன்னர் செய்த முயற்சிகளில் இதே செயல்பாட்டிற்கு 600 அமெரிக்க டாலர் வரையில் செலவான நிலை வணிக அளவில் வரவேற்கப்படவில்லை.

நிரூபிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம் உலகளாவிய அளவிலான சுத்திகரிக்கப்பட்ட செயற்கை எரிபொருட்களை உருவாக்க காற்று, நீர் மற்றும் உற்பத்திக்குத் தேவையான புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆகியனவே தேவை. காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடும், நீரிலிருந்து ஹைட்ரஜனும் பெறப்படுகிறது. காற்றிலிருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் முறையால் சுற்றுச்சூழல் மேம்படுகிறது. காற்று மாசடைவது குறைக்கப்படுகிறது. இதை வணிக சந்தைகளில் விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதும் எளிது என்றும் கூறப்படுகிறது.

காற்றில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எரிபொருளைப் பயன்படுத்த சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட வாகனங்களோ அல்லது புதியமுறை உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகளில் மாற்றமோ தேவையில்லை. வழக்கமான பெட்ரோல் விற்கும் இடங்களிலேயே இந்த எரிபொருளையும் வினியோகம் செய்து, பயன்பாட்டில் உள்ள வாகனங்களில் இதை எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம். போக்குவரத்து வாகனங்களினால் கார்பன்-டை-ஆக்சைடு வெளிப்பட்டு வளிமண்டலத்தில் சேரும்போது, அதை மீண்டும் காற்றில் இருந்து உறிஞ்சி மறுசுழற்சி செய்து எரிபொருளாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தமுறையில் காற்றில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடும் நீக்கப்படுவதுடன் அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது என இரு வகையிலும் தொழில்நுட்பம் உதவுகிறது. இம்முறை வணிக அளவில் வெற்றிபெற்றால் கச்சா எண்ணெய் பயன்பாடும் குறையும்.

ஆகவே இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விரும்பும் வகையில், சுத்தமான போக்குவரத்து எரிபொருட்களை உருவாக்கும் கனவு நிறைவேறத் தொடங்கியதன் தொடக்கம் என கருதலாம். குறிப்பாக இந்த முறையில் ஹைட்ரோகார்பன் எரிபொருள் உற்பத்தி செய்வது டெல்லி, மும்பை, சென்னை போன்ற இந்தியாவின் பெருநகரங்களில் காற்றின் தூய்மைக்கு வழிவகுக்கும்.

- முனைவர் தேமொழி, கலிபோர்னியா (அமெரிக்கா)

Next Story