காணொலி காட்சி மூலம் வாழப்பாடி விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி


காணொலி காட்சி மூலம் வாழப்பாடி விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 21 Jun 2018 3:45 AM IST (Updated: 21 Jun 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி வாழப்பாடி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

வாழப்பாடி,

மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த பயனாளிகளுடன் பிரதமர் மோடி, நமோ செயலி மற்றும் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் நேற்று இந்தியாவில் பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இதையொட்டி, சேலம் மாவட்டம் வாழப்பாடி சி.எஸ்.சி. பொது சேவை மையத்தில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதலில் பிரதமர் மோடி விவசாயிகளின் தேவைகள், குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

நாடு முழுவதிலும் உள்ள 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் அரசு விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கடுமையாக உழைக்கும் விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இருமடங்காக்க அரசு உறுதி பூண்டுள்ளது.

வேளாண்மையில் மகத்தான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. முந்தைய அரசை விட முன்னேற்றத்தை கொண்டு வர நினைக்கிறோம். விவசாயம் சார்ந்த அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் விவசாயிகளுக்கு உதவி வருகிறோம். விதைப்பது முதல் விளைச்சலை சந்தைப்படுத்துவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய அரசு உதவி வருகின்றது.

காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா புதிய சாதனை படைத்து வருகிறது. எதிர்பாராமல் ஏற்படும் வறட்சி மற்றும் கடும் மழையினால் பயிர்கள் இழப்பை சமாளிக்க விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வது மிக அவசியம் ஆகும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Tags :
Next Story