ஈரான் நாட்டில் தவிக்கும் நெல்லை மாவட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், உறவினர்கள் கோரிக்கை


ஈரான் நாட்டில் தவிக்கும் நெல்லை மாவட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், உறவினர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2018 2:45 AM IST (Updated: 21 Jun 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

ஈரான் நாட்டில் தவித்து வரும் நெல்லை மாவட்ட மீனவர்கள் 6 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

நெல்லை, 

ஈரான் நாட்டில் தவித்து வரும் நெல்லை மாவட்ட மீனவர்கள் 6 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

மீனவ கிராம மக்கள் மனு

நெல்லை மாவட்டம் பெருமணல், கூடுதாழை பகுதியை சேர்ந்த மீனவ கிராம மக்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

ஈரான் நாட்டில் உள்ள நாகில் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷாலா. அவருக்கு சொந்தமான விசைப்படகில் வேலை செய்ய நெல்லை மாவட்டம் பெருமணலை சேர்ந்த சந்தியாகு விஜய் (வயது 23), சுமன் (32), விக்னேஷ் (28), மிக்கேல் (35), ராயப்பன் (48), மார்க் (23) ஆகிய 6 பேர் சென்றனர். அவர்கள் சென்று 8 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அவர்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை. இதனால் எங்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறது. அவர்கள் 6 பேரையும் மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஈரான் நாட்டில் தவிக்கிறார்கள்

இதுகுறித்து ராயப்பன் மனைவி மேரி ரெஜிலா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். மொத்தம் 21 பேர் சென்று இருக்கிறார்கள். இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 6 பேர் ஆவார்கள். 21 பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. அவர்கள் ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை. அங்கு இருக்கும் மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். சம்பளம் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். அதனால் என் கணவரை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story