பள்ளி செல்ல தாயுடன் நின்றபோது வேன் மோதி சிறுமி சாவு
பள்ளி செல்ல தாயுடன் நின்றபோது வேன் மோதி சிறுமி பரிதாபமாக இறந்தார். கிராம மக்கள் வேன் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
சென்னை,
சென்னையை அடுத்த பொன்னேரி அருகே உள்ள ஆலாடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு பிரியன் என்ற மகனும், பிரியதர்ஷினி, பிரகதி என்ற ஐஸ்வர்யா (வயது 4) என்ற மகள்களும் இருந்தனர். 3 பேரும் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். பிரகதி யு.கே.ஜி. படித்து வந்தார். மகன், மகள்களை வழக்கமாக கல்பனா அரசு பஸ்சில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார்.
நேற்று காலை அவர் வழக்கம் போல மகன், மகள்களுடன் பள்ளி செல்வதற்காக அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது சோழவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
சாவு
அந்த வேன் திடீரென பஸ்சுக்காக காத்திருந்த கல்பனா மற்றும் அவரது மகன், மகள்கள் மீது மோதியது. இதில் வேன் சக்கரத்தில் சிக்கிய பிரகதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். கல்பனா அவரது மகன், மற்றொரு மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து பற்றி அறிந்ததும் கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
ஆத்திரம் அடைந்த அவர்கள் வேன் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். மேலும் வேன் டிரைவரான கோளூரை சேர்ந்த நந்தகுமாரை சரமாரியாக தாக்கினர். விபத்து ஏற்படுத்திய டிரைவரை கிராம மக்கள் பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story