திருப்பூர் அருகே 1,200 ஆண்டு பழமையான புலிக்குத்திக்கல் கண்டெடுப்பு


திருப்பூர் அருகே 1,200 ஆண்டு பழமையான புலிக்குத்திக்கல் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 21 Jun 2018 4:15 AM IST (Updated: 21 Jun 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே 1,200 ஆண்டு பழமையான புலிக்குத்திக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

மனித வாழ்க்கையில் பிம்பங்கள் மண்ணோடு மறைந்து போனாலும் அவர்களின் வாழ்வியல் நெறிமுறைகள், விழுமியங்கள் காலத்தால் அழியாமல் சிலைகள் எனும் சிற்பங்களால் இன்றும் கண்முன் சாட்சியாய் காட்சியளிக்கின்றன. கொங்கு மண்டலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கலாசார பொக்கி‌ஷங்கள் புதைந்து கிடக்கின்றன.

திருப்பூரை அடுத்த பொங்குபாளையம் கிராமத்தில் வட்டெழுத்துக்களுடன் கூடிய 1,200 ஆண்டுகள் பழமையான புலிக்குத்திக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் செயல்பட்டு வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் ரவிக்குமார் தலைமையில் குமார், சதாசிவம், பொன்னுச்சாமி, வேலுச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த புலிக்குத்திக்கல்லை கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொறியாளர் ரவிக்குமார் கூறியதாவது:–

பண்டைய காலத்தில் கால்நடைகள் பெரும் செல்வமாக விளங்கியது. கால்நடைகளை தனி மனிதனின் உடமையாக மட்டும் இல்லாமல் அந்த ஊரில் பொதுவான செல்வமாக போற்றி வந்துள்ளனர். இந்த கால்நடைகளை புலியிடம் இருந்து காப்பாற்றுவதற்காக புலியுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த வீரனின் நினைவாக, வீரத்தின் அடையாளமாக வீரநடுகற்கள் நடப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் புறத்திணையியலில் நடுகற்கள் பற்றிய செய்திகள் உள்ளன. சங்க காலத்தில் வீரர்களுக்கு இருந்த பெருமைகளை சங்கப்பாடல்கள் கூறுகின்றன.

பொங்குபாளையம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புலிக்குத்திக்கல், வீரநடுகல் வகையை சேர்ந்தது. இந்த கல் 65 சென்டி மீட்டர் அகலமும், 120 சென்டி மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது. இதில் வீரனின் தலை வலதுபுறம் சாய்ந்த நிலையில் உள்ளது. வீரன் தனது வலது கையில் உள்ள ஈட்டியால் புலியின் கழுத்துப்பகுதியை குத்தும் வகையிலும், இடது கையை தன்னை தாக்கும் புலியை தடுக்கும் வகையிலும் வீரக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது. புலியின் முன்னங்கால் இரண்டும் எழுந்த நிலையில் வீரனின் இடுப்பு பகுதியிலும், பின்னங்கால் இரண்டும் வீரனின் இடதுகால் மேல் அழுத்திய நிலையிலும் உள்ளது.

இந்த கல்லில் வீரன் காது, கழுத்துப்பகுதியில் அணிகலன்களும் கையில் வீரக்காப்பும், இடையில் மட்டும் ஆடை அணிந்துள்ளார். இந்த கல்லின் இடது மேல் பக்கவாட்டில் 6 வரிகளைக்கொண்ட வட்டெழுத்து செய்தி உள்ளது. வரலாற்று பேராசிரியர்கள் சுப்பராயலு, பூங்குன்றனார் ஆகியோர் அந்த வட்டெழுத்துக்களை படித்து அதில் ‘தேவரு புலிகு(த்)தி பட்டார் கல்’ என்று உள்ளது என்று கூறினார்கள்.

தேவரு என்பவர் இந்த பகுதியில் இருந்த கால்நடை செல்வங்களை புலியிடம் இருந்து காப்பாற்றிய போது, புலி தாக்கி இறந்து விட்டார். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வழிபடும் வகையில் இந்த வீரநடுகல் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டது. இந்த வீர நடுகல் உள்ள பகுதிக்கு அருகிலேயே பெருங்கற்படைக்காலத்து மக்கள் வாழ்ந்த சாம்பற்காட்டுத்தோட்டமும், இறந்த பிறகு அடக்கம் செய்யும் பாண்டியக்காடும் இருப்பதால் பொங்குபாளையம் கிராமமும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் நாகரிகத்தை கொண்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story