கல்யாண் ரெயில் நிலையத்தில் பெண் பயணியை மானபங்கம் செய்த போலீஸ்காரர் வீடியோ வெளியாகி பரபரப்பு
கல்யாண் ரெயில் நிலையத்தில் பெண் பயணியை போலீஸ்காரர் ஒருவர் மானபங்கம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்பர்நாத்,
கல்யாண் ரெயில் நிலையத்தில் பெண் பயணியை போலீஸ்காரர் ஒருவர் மானபங்கம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பயணி மானபங்கம்
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள கல்யாண் ரெயில் நிலையத்தில் பெண் பயணியை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர் மானபங்கம் செய்யும் வீடியோ காட்சி நேற்று வெளியானது. இந்த சம்பவம் கல்யாண் ரெயில் நிலையத்தின் 6-ம் எண் பிளாட்பாரத்தில் நடந்து உள்ளது.
இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் பயணியின் அருகில் அந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் அமர்ந்து இருக்கிறார்.
கால் மீது கால் போட்டு அமர்ந்திருக்கும் அவர் தனது ஒரு கையால் முகத்தை மறைத்து தூங்குவது போல் பாசாங்கு செய்கிறார். அதே நேரத்தில் அவரது இடது கை அருகில் அமர்ந்திருக்கும் பெண் பயணியின் முதுகில் சீண்டலில் ஈடுபடுகிறது.
பணி இடைநீக்கம்
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் பயணி அருகில் இருக்கும் தனது உறவினரிடம் கூறுகிறார். அப்போது, அதே இருக்கையில் இருந்த ஒருவர் இதை பார்த்து ஆத்திரம் அடைந்து போலீஸ்காரரை சரமாரியாக தாக்குகிறார். இந்த காட்சிகளை பிளாட்பாரத்தில் இருந்த ஒருவர் ரகசியமாக படம் பிடித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், பெண் பயணியை மானபங்கம் செய்த போலீஸ்காரரின் பெயர் ஜாங்கீர் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story