‘தமிழ்நாடு’ பொன்விழா ஆண்டையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 25-ந் தேதி நடக்கிறது
‘தமிழ்நாடு’ பொன்விழா ஆண்டையொட்டி கல்லூரி மாணவ-மாணவி களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 25-ந் தேதி நடக்கிறது.
வேலூர்,
கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1967-ம் ஆண்டு சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 50 ஆண்டுகள் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு ‘தமிழ்நாடு’ பொன்விழா ஆண்டாக கொண்டாட அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பெருமையையும், தமிழர் பெருமையையும் அனைவரும் உணரும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்பட உள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்
வேலூர் மாவட்ட அளவிலான போட்டிகள் வேலூர் ஊரீசு கல்லூரியில் 25-ந் தேதி நடைபெற உள்ளது. கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் வீதம் மொத்தம் 3 பேர் மட்டுமே போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்கும் முன்பாக அறிவிக்கப்படும். தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த பேரறிஞர் அண்ணா, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.கல்யாண சுந்தரனார், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோரின் படைப்புகளையொட்டி போட்டிகளின் தலைப்புகள் அமையும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.
மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story