உயிரோடு இருக்கும் நோயாளி இறந்துவிட்டதாக கூறி வேறொருவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு


உயிரோடு இருக்கும் நோயாளி இறந்துவிட்டதாக கூறி வேறொருவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 21 Jun 2018 4:08 AM IST (Updated: 21 Jun 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

சாங்கிலி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரோடு இருந்த நோயாளியை இறந்துவிட்டதாக கூறி, வேறு ஒருவரின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை, 

சாங்கிலி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரோடு இருந்த நோயாளியை இறந்துவிட்டதாக கூறி, வேறு ஒருவரின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு ஆஸ்பத்திரி

சாங்கிலி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில், அவினா‌ஷ் தாதாசாகேப் பக்வடே(வயது50) என்பவர் கல்லீரல் கோளாறு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவருடைய குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஆஸ்பத்திரி நிர்வாகம், அவினா‌ஷ் தாதாசாகேப் பக்வடே இறந்து விட்டதாக கூறியது.

இதைத்தொடர்ந்து அழுதபடி ஆஸ்பத்திரிக்கு சென்ற அவரது குடும்பத்தினரிடம், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, துணியால் மூடப்பட்ட ஒரு உடலை ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக உறவினர் ஒருவர் சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பியபோது, மரியாதையாக உடலை பெற்றுக்கொண்டு வெளியேறுமாறு ஆஸ்பத்திரி ஊழியர்கள் கண்டிப்புடன் கூறினர்.

உயிரோடு இருப்பவரை...

இதையடுத்து அவினா‌சின் குடும்பத்தினரும் அந்த உடலுடன் வீட்டுக்கு வந்தனர். அதேநேரத்தில் அஞ்சலி செலுத்த வந்த சில உறவினர்களுக்கு அது அவினா‌ஷ் உடல்தானா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால், முழுமையாக துணியை அகற்றி பார்த்தனர். அப்போது, அது வேறு ஒருவரது உடல் என்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர். அப்போது, அவினா‌ஷ் அங்கு சிகிச்சை பெற்று வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக கூறியதுடன், வேறு நபரின் உடலை ஒப்படைத்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது ஆஸ்பத்திரி சூப்பிரண்டு சுபோத் உகானேவிடம் புகார் தெரிவித்தனர்.

பரபரப்பு

இதுபற்றி விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதே சமயத்தில், ஒப்படைக்கப்பட்ட உடல் யாருடையது என இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. மேலும் அந்த உடலுக்கு யாரும் உரிமை கோரவும் இல்லை. இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக கூறி வேறு ஒருவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story