பெங்களூருவில் இருந்து வேலூருக்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருகை


பெங்களூருவில் இருந்து வேலூருக்கு புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருகை
x
தினத்தந்தி 21 Jun 2018 4:09 AM IST (Updated: 21 Jun 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து 10 கன்டெய்னர் லாரிகளில் 8 ஆயிரத்து 700 புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 730 கட்டுப்பாட்டு கருவிகளும் வேலூருக்கு வந்தன.

வேலூர்,

இந்திய நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள 9 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்களின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.

எனவே தலைமை தேர்தல் ஆணையம் 14 லட்சம் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாங்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாரிக்கும் பணி பல்வேறு பகுதிகளில் நடந்து வந்தது.

புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்

அதன்படி, வேலூர் மாவட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டன. அவை நேற்று 10 கன்டெய்னர் லாரிகள் மூலம் வேலூருக்கு கொண்டு வரப்பட்டன. லாரிகளில் 8 ஆயிரத்து 700 புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 730 கட்டுப்பாட்டு கருவிகளும் இருந்தன.

அவற்றை கலெக்டர் ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் செல்வராசு, தேர்தல் தாசில்தார் சச்சுதானந்தன், வேலூர் தாசில்தார் பாலாஜி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் முன்னிலையில் வேலூர் டோல்கேட் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள குடோனில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

தகுதி சான்றிதழ்

புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை பெல் நிறுவன பொறியாளர்கள் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அப்போது புதிய எந்திரங்களில் ஏதாவது கோளாறு உள்ளதா? என கண்டறிந்து, அதற்கு பின்னர் தகுதி சான்றிதழ் அளிக்க உள்ளனர். வாக்காளர்கள் யாருக்கு வாக்கு அளித்தனர் என்பதை தெரிந்து கொள்ளும் ‘விவிபேட்’ எந்திரங்கள் விரைவில் வேலூருக்கு வர உள்ளது.

இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை (ஒரு பகுதி) ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story