பத்து வயதுச் சிறுவனின் அந்தப் பாட்டு


பத்து வயதுச் சிறுவனின் அந்தப் பாட்டு
x
தினத்தந்தி 21 Jun 2018 10:50 AM IST (Updated: 21 Jun 2018 10:50 AM IST)
t-max-icont-min-icon

இன்று (ஜூன் 21-ந்தேதி) உலக இசை தினம்.

“மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டிப் போரடிக்கும்
அழகான தென்மதுரை”
என்ற பாடல் மதுரை நகரின் செல்வ செழிப்பை பறைசாற்றுகிறது.

தென்மதுரை மட்டுமல்ல கீழ்மதுரையும், வடமதுரையும் கரும்பும் செந்நெல்லும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைக் கம்பளம் விரித்துப் பார்வைக்குப் பரவசமூட்டும். வடமதுரைப் பகுதிக்குப் பொட்டிட்ட ஊர் பூலாம்பட்டி. பொன் விளையும் பூமி அந்தப் பூலாம்பட்டி.

நாங்கள் பணியாற்றிய மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காவலராகப் பணியாற்றிய பெரியசாமியை எங்கள் இல்லத்தில் ஏதாவது ஒரு கிராமத்திலிருந்து வந்த மூதாட்டி அல்லது பெரியவர் பாடும் பாட்டுச் சத்தம் நகரவிடாது கட்டிப்போடும். இசையிலும், பாட்டிலும் தன்னை இழக்கும் பெரியசாமி ஓர் ஆட்டக்காரக் கலைஞர்.

ஒருநாள் எங்கள் இல்லக்கதவைக் காலையில் யாரோ தட்டும் ஒலி கேட்டது.

கதவைத்திறந்தால் காவலர் பெரியசாமியின் காட்சி. பாட்டுச் சத்தம் இல்லையே, பின்னர் ஏன் இங்கே இவர் நிற்க வேண்டும்? என்ற என் மனதில் உதித்த வினாவினை எப்படியோ உணர்ந்த பெரியசாமி, “அய்யா என் மனைவி ஊர் பூலாம்பட்டி சிறுவரிலிருந்து பெரியவர் வரை பாடும் பாட்டொலி ஊர் முழுவதும் எப்போதும் எதிரொலித்துக் கொண்டிருக்கும். நாம் இவ்வார ஞாயிற்றுக்கிழமை அன்று ஏர் பூட்டும் காலை நேரத்திற்குள் பூலாம்பட்டி செல்வோம்” என்றார்.

அவர் சொன்ன ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. என்னுடைய வண்டி பூலாம்பட்டியைத் தொட, அந்த மண்ணைத் தொட்டு வணங்கினோம். சொல்லிவைத்தாற்போல், மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சின்னப் பையன், எங்கள் அருகில் கைக்கோலுடன் காட்சி அளித்தான். உடன் வந்த பெரியசாமிக்கோ மிக்க மகிழ்ச்சி.

அந்தப் பத்து வயதுச்சிறுவனின் பாட்டு எங்கள் செவியில் வாய்மடைத் தண்ணீராய்ப் பாய்ந்தது.

“என்
ஆத்திப்பூ வாசினியே
அள்ளிப் பூசுர சந்தனமே
என்
பன்னீரு வாசினியே
உன்னைப் பாக்குறது
எந்த விதம்”


அவள் கூட்டத்துக்குள் நிற்கிறாள். அவள் வாசனை இவனுக்குத் தெரியும். ஆனால், அவளைத் தேடிக் கண்டுபிடிப்பது எப்படி? கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் கவிதை எங்கள் நினைவுக்கு வந்தது.

“இந்த ரோசாப்பூ
ஒரு பாட்டுப் பாடுகிறது-அது
உன் காதுக்குக் கேட்காது-ஆனால்
மூக்குக்குக் கேட்கும்”
என்ன அற்புதமான கற்பனை. என்றோ படித்தது. எங்கள் நெஞ்சில் பதியம் போட்டுவிட்டது அக்கவிதை.

“ஆளுக்குள்ளே-ஆணழகு
அவன் ஒசரமான ஆளு”
என்பதால் அவளும் அவனைப் பார்த்துவிட்டாள்.

அவன் “ஏ! புள்ள” என்றால் திரும்பிப் பார்க்கலாம். கூட்டத்துக்குள் அவனை மட்டும் கூப்பிடுவது எப்படி? அத்தான் என்று அழைக்கலாமா? மச்சான் என்று கூப்பிடவா? “மாமோய்” என்று கத்தவா? “சாமி” என்று சாடை பேசவா?

இது அவளின் மனப்போராட்டம்

“எலுமிச்சங் கனியழகே
இடதுகையி தேன்கரும்பே
ஏலம் கிராம்பு நீயே-உன்ன
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்”
என்பது அவளின் பதில்பாட்டு.

வலதுகையில் கன்று கட்டும் தாம்புக்கயிறு. இடதுகையில் உள்ள தேன் கரும்பு தன் வாய்க்கு விருந்தளிக்கிறது. அவன் காளையை அடக்கி, இவள் கழுத்தில் நாளை தாலி கட்டப் போகிறவன். எவ்வளவு கூட்டத்துக்குள் இருந்தாலும், அவன் வாசனையும் அவளுக்குத் தெரியுமல்லவா? ஏலம், கிராம்பும் இட்ட சர்க்கரைப் பொங்கலும், தேன் கரும்பும் இல்லாமலா தை பிறக்கும்.

அவள்;

“சந்திரரே, சூரியரே
சாமியே என் துரையே
இந்திரருக்கு இளையவரே
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்”.


அவன்;

“ஆத்தோரம் கொடிக்காலாம்
அரும்பரும்பா வெத்தலயாம்
போட்டாலுஞ் செவக்குதுல்ல
பூமயிலே ஒன்நினைப்பில்”


பாட்டுத் தொடரும் என ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் அவனோ,

“மொன்னமாடு தூங்குது
மூக்கணாங்கயிறு மேயுது”


அது, என்னன்னு சொல்லுங்க பாக்குறேன் என்றான், அந்தச் சிறுவன். ஒன்றும் புரியாமல் கலங்கினோம். மாடு தூங்குதாம். மூக்கணாங்கயிறு மேயுதாம். அது எப்படி?

“மாடுங்கிறது பூசணிக்காய்
படர்ந்துவர்ற கொடி மூக்கணாங்கயிறு”
என்று எங்களைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தான் அச்சிறுவன். இச்சிறுவனிடம் தோற்றுப் போகலாமா? எங்கள் சாமர்த்தியத்தையும் காட்ட வேண்டுமல்லவா? நாங்களும் ஓர் அழிப்பாங்கதை போட்டோம்.

“ஆயிரம் கொடுக்குத் தேள்
ஆகாசத்தில் தொங்குது”
என்னன்னு சொல்லு பார்க்கலாம் என்றோம்.

“ப்பூ இவ்வளவு தானா” ஆயிரங் கொடுக்குத் தேளு, ஆகாசத்தில் தொங்குதா! “அதுதான் ஆமணக்கு, சரியா!” என்று சிரித்துக் கொண்டே “மாடு மலை சாஞ்சுபோயிரும் சாமி” என்று கம்பைச் சுழட்டிக் கொண்டு மலைப்பக்கம் ஓடிப் போனான்.

திரும்பி பார்க்கிறோம். 40 ஆண்டுகள் முழுமையாக கடந்துவிட்டன. நாட்டுப்புற பாடல்களாம் எண்ணற்ற நவதானியங்களை சேகரிப்பதும், சேகரித்தவற்றை சிந்தித்து வகைப்படுத்தி ஆராய்ந்து சிந்தாமல் சிதறாமல் உலகெங்கும் உள்ள தமிழர் செவிகளில் பரிமாறுவதும் எங்களின் இருவிழிகளாகும்.

பாடல்களை சேகரிப்பதற்காக சிறகடித்த பறவைகளாய் நாங்கள் கடந்த 20 லட்சம் கிலோ மீட்டர் பரப்பளவில், பெற்ற பாடல்களும் இசை கோவைகளும் எங்கள் பயண களைப்பை போக்கும் மூலிகைகளாய் அமைந்தன.

உலக மொழிகளுள் மிகவும் பழமையான தமிழ் மொழியின் ஆதிமூல இசையை தமிழர்கள் வாய்மொழி மூலமாகவே கேட்ட போது பெரிதும் உவந்தன எங்கள் செவிகள். இப்பயணத்தில் தான் எத்தனை சிக்கல்கள், இன்னல்கள், இடையூறுகள், இழப்புகள்.

இவற்றையெல்லாம் மறக்க செய்தது, இந்திய குடியரசு தலைவர் எனக்கு அணிவித்த பத்மஸ்ரீ பதக்கம்.

பத்மஸ்ரீ பதக்கம் அணிவித்த குடியரசு தலைவர் நாட்டுப்புற பாடல் சேகரிப்புக்காகவும் பரப்புரைக்காகவும் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளை சிலாகித்து பாராட்டியபோது, கள ஆய்வுக்கு சென்றபோதெல்லாம் கனிவுடன் நாட்டுப்புற பாடல்களை தங்கள் நாக்குகளில் நடனமிட செய்த ஆயிரக்கணக்கான முதியோர்கள் என் கண் முன்னே தோன்றி, என் விழிகளை தண்ணீர் குளமாக்கினர்.

அம்மூதாட்டிகளுள் ஒருவர் பாடிய

“பட்டியில் தொட்டியில் பொண் பிறந்தேன்-நல்ல
பாட்டு படிக்கவா பொண் பிறந்தேன்
பாடத்தெரியாத சிறு குழந்தைக்கு
வேதம் படிக்கிறேன் பாருங்கம்மா”
என்ற பாட்டின் பழந்தமிழ் இசை, உலக இசை நாளாம் இன்று கும்பாவில் இருக்கும் நார்த்தங்காயோடு கூடிய பழையச்சோறாகவும், பனை மட்டையில் ததும்பும் பதநீராகவும், குழந்தையின பொக்கை வாய் சிரிப்பை போன்று இளநொங்காகவும் உலக தமிழர்களின் செவிகளில் சுவை கூட்டிக்கொண்டே இருக்கும்.

- பத்மஸ்ரீ விருதுபெற்ற பேராசிரியர் விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன்

Next Story