2016–17–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை ஒரு மாதத்துக்குள் 100 சதவீதம் வழங்கப்படும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
2016–17–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை ஒரு மாதத்துக்குள் 100 சதவீதம் வழங்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
2016–17–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை ஒரு மாதத்துக்குள் 100 சதவீதம் வழங்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தங்கவேல், வேளாண்மை இணை இயக்குனர் முத்துஎழில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேருக்கும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
முன்குறுவை சாகுபடிஎட்டயபுரத்தை தனி யூனியனாக அறிவிக்க வேண்டும். 2015–16–ம் ஆண்டுக்கு பிறகு எங்கள் பகுதியில் எந்தவித சாலை பணிகளும் நடைபெறவில்லை. அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும். மணிமுத்தாறு அணையில் இருந்து முன்குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆகையால் முன்குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். கடம்பா குளம் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். வடக்கு சிலுக்கன்பட்டியில் காற்றாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் வீடுகளுக்கு சென்று போலீசார் மிரட்டி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருதூர் மேலக்கால்வாய் மூலம் 12 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. 16 குளங்கள் உள்ளன. இதில் கடைசி 6 குளங்கள் நிரம்புவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகையால் கால்வாயில் தூர்வார வேண்டும். தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். 2016–17–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தில் 18 கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உரிய காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:–
பயிர் காப்பீட்டு தொகைதூத்துக்குடி மாவட்டத்தில் பொறுப்பேற்ற பிறகு எனக்கு இது முதல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். ஆனால் பயிர் காப்பீடு தொடர்பாக ஏற்கனவே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். 2016–17–ம் ஆண்டு பயிர் காப்பீட்டு தொகை ரூ.257 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் ரூ.255 கோடி காப்பீட்டு தொகை 95 ஆயிரத்து 502 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றுக்கு காப்பீட்டு தொகை வர வேண்டி உள்ளது. ஒரு மாதத்துக்குள் 100 சதவீதம் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும். இதற்காக வேளாண்மை ஆணையரிடம் பேசி உள்ளேன்.
தண்ணீர் திறப்புதாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 300 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்பட்டு இருந்தது. அதனை நெல்லை கலெக்டரிடம் பேசி 500 கனஅடியாக அதிகரித்து உள்ளோம். தற்போது வாழைப்பயிர்களை பாதுகாக்க 1000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளீர்கள். அரசு உத்தரவின் அடிப்படையில் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும்.
வருகிற 24–ந் தேதி பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தின் தண்ணீர் தேவை, அணையில் நீர் இருப்பு விவரம், அரசாணை குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனை அரசுக்கு சமர்ப்பித்து தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
மருதூர் மேலக்கால்வாயில் நேரடி மடைகள் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு தூர்வாரப்படும். கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு தாமதம் இல்லாமல் பணம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.