ஊட்டி ஏரியில் சுற்றுலா பயணிகள் சென்ற மிதி படகு சேற்றில் சிக்கியது


ஊட்டி ஏரியில் சுற்றுலா பயணிகள் சென்ற மிதி படகு சேற்றில் சிக்கியது
x
தினத்தந்தி 22 Jun 2018 3:30 AM IST (Updated: 22 Jun 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி ஏரியில் சுற்றுலா பயணிகள் சென்ற மிதி படகு சேற்றில் சிக்கியது. அதை மீட்க சென்ற ஊழியரின் படகும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முன்பு முக்கிய குடிநீர் ஆதாரமாக ஊட்டி ஏரி விளங்கியது. நாளடைவில் ஊட்டி நகரில் கட்டிடங்கள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் முறையின்றி கட்டப்பட்டன. இதனால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் விடப்பட்டது. அந்த கால்வாயில் செல்லும் சாக்கடை கழிவுநீர் ஊட்டி ஏரியில் கலக்கிறது. இதனால் ஊட்டி ஏரி கடும் தூர்நாற்றம் வீசியதோடு, மாசடைந்து காணப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஊட்டி ஏரியை பாதுகாக்க நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் ஊட்டி நகரில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரை ஏரி அருகே உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு கிணற்றில் தேக்கி வைக்க நடவடிக்கை எடுத்தனர். அந்த கழிவுநீர் மோட்டார் மூலம் காந்தல் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு கொண்டு சென்று, சுத்திகரித்து மீண்டும் ஊட்டி ஏரியில் விடப்பட்டது.

இதனால் பருவமழை காலங்களில் விவசாய நிலங்களில் இருந்து அடித்து வரப்படும் மண், பிளாஸ்டிக் உள்ளிட்டவை ஊட்டி ஏரியில் கலந்து வருகிறது. அதன் காரணமான ஏரியின் ஒரு பகுதியில் மண் திட்டுகள் உருவாகி, அதன் மீது புதர் மண்டி மோசமான நிலையில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், ஊட்டி ஏரியில் படிந்த சேறு, மண்ணை அகற்றப்பட்டு, ஏரி ஆழப்படுத்தப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக ஊட்டி ஏரி தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் அவ்வப்போது ஏரியில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றுவதும், நிறுத்துவதுமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் 4 பேர் மிதி படகில் சவாரி செய்து கொண்டிருந்தனர். ஊட்டி ஏரியின் ஒரு பகுதியில் அவர்கள் சென்ற போது, திடீரென எதிர்பாராதவிதமாக மிதிபடகு சேற்றில் சிக்கியது.

உடனே அதில் இருந்த 4 சுற்றுலா பயணிகள் படகை இயக்க முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால் அவர்கள் பயத்தில் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்ச லிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை பார்த்து ஊட்டி ஏரியில் பாதுகாப்பு படகில் இருந்த படகு இல்ல ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் மோட்டார் படகை இயக்கிக்கொண்டு சேற்றில் சிக்கிய மிதி படகை மீட்க சென்றனர். அப்போது அவர் வந்த மோட்டார் படகும் சேற்றில் மாட்டிக்கொண்டது. இதையடுத்து அவர் படகு இல்லத்தில் தயார் நிலையில் இருந்த பாதுகாப்பாளர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து 2 ஊழியர்கள் துடுப்புபடகில் சென்றனர். அவர்கள், சேற்றில் சிக்கிய மிதிபடகில் சவாரி செய்த சுற்றுலா பயணிகள் 4 பேரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் படகு இல்ல ஊழியர் வந்த மோட்டர் படகும் மீட்கப்பட்டது. இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது.

ஊட்டி படகு இல்ல பணியாளர்கள் ஆபத்தில் சிக்கியவர்களை உடனடியாக காப்பாற்றினார்கள். ஆனால், ஊட்டி ஏரி படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து உள்ளது. எனவே, தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் ஊட்டி ஏரியை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழை பெய்து வருவதால் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் படகு சவாரி செய்யாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story