அடர்ந்த வனப்பகுதிக்குள் மாயமான தொழிலாளி மோப்பநாய் உதவியுடன் மீட்பு


அடர்ந்த வனப்பகுதிக்குள் மாயமான தொழிலாளி மோப்பநாய் உதவியுடன் மீட்பு
x
தினத்தந்தி 22 Jun 2018 4:00 AM IST (Updated: 22 Jun 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

மசினகுடி அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் மாயமான தொழிலாளி மோப்பநாய் உதவியுடன் மீட்கப்பட்டார்.

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயலை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 48). விவசாய கூலி தொழிலாளி. இவர் மசினகுடி அருகே பொக்காபுரத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 19-ந் தேதி மாலை திடீரென்று மனநலம் பாதிக்கபட்டு அருகில் இருந்த பொக்காபுரம் அடர்ந்த வனபகுதிக்குள் சென்றுள்ளார். உடனே அவரை தேடி உறவினர்கள் வனபகுதிக்குள் சென்றனர். அப்போது இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை கைவிட்டு திரும்பி வந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் மசினகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார், தனி பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் விஜயன், நக்சல் தடுப்பு பிரிவு தலைமை காவலர் மகேஸ், காவலர்கள் முத்துராஜ், செல்வகுமார் ஆகியோர் ராமகிருஷ்ணனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தேட முயன்றனர்.

ராமகிருஷ்ணன் சிங்காரா வனச்சரகம் பொக்காபுரம் வனபகுதிக்குள் சென்று மாயமானதால் சிங்காரா வனச்சரகர் காந்தனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கபட்டு வரும் மோப்பநாயின் உதவியையும் தேடுதல் வேட்டை நடைபெற்றது. முதுமலை தெப்பகாட்டில் இருந்து பொக்காபுரம் வனபகுதி முழுவதும் நேற்று முன்தினம் மாலை வரை தேடும் பணி நடைபெற்றது. அப்போது வனப்பகுதியில் அவர் கட்டி இருந்த வேட்டி மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ராமகிருஷ்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே கல்லல்லா வன பகுதியில் ராமகிருஷ்ணனை பார்த்ததாக மாடு மேய்க்க சென்ற ஒருவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நேற்று காலை முதல் மோப்பநாய் உதவியுடன் கல்லல்லா வனபகுதியில் மோப்பநாய் மூலம் தேடும் பணி நடைபெற்றது. மோப்பநாய் வனப்பகுதிக்குள் சிறிது தூரம் ஓடி ராமகிருஷ்ணன் படுத்து கிடந்த இடத்தின் அருகே சென்று குரைத்தது.

ராமகிருஷ்ணனை பார்த்ததும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மிகவும் சோர்வுடன் இருந்த அவரை மீட்டு மசினகுடிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டார்.

அடர்ந்த வனபகுதிக்குள் சென்று மாயமானவரை மோப்பநாய் உதவியுடன் 40 மணி நேரம் தேடி வனத்துறை மற்றும் போலீசார் கண்டுபிடித்தனர். இதற்காக அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story