அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மக்கள் ஆதரவோடு மீட்டெடுப்போம் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி


அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மக்கள் ஆதரவோடு மீட்டெடுப்போம் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2018 3:00 AM IST (Updated: 22 Jun 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளதால் அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மக்கள் ஆதரவோடு மீட்டெடுப்போம் என்று நெல்லையில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

நெல்லை, 

தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளதால் அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மக்கள் ஆதரவோடு மீட்டெடுப்போம் என்று நெல்லையில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

டி.டி.வி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு தாழையூத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தாழையூத்து மற்றும் கரையிருப்பு ஆகிய இடங்களில் கொடியேற்றினார்.

மாலையில் மேலப்பாளையம் குறிச்சி முக்கு, ஆசாத் ரோடு, பஜார் திடல், வி.எஸ்.டி.பள்ளிவாசல், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், தருவை ஆகிய பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார். ஒருசில இடங்களில் கொடியேற்றி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களை பாதுகாக்கும் இயக்கம்

தமிழகத்தில் துரோக ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும். நாம் அனைவரும் சாதி, மத வேறுபாடு இன்றி வாழ்கிறோம். நம்மிடையே பிரிவினையை உருவாக்கி அரசியல் லாபம் பெறும் சூழ்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆனால் எந்த ஒரு சக்தியாலும் நம்மிடையே பிரிவினையை உருவாக்க முடியாது. அரசியல் கட்சிக்கு ஓட்டு போடுவதையும் தாண்டி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். இதை என்றென்றும் கடைபிடிக்க வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாதி, மத பேதமற்ற இயக்கம். மக்களின் நலனையும், மக்களையும் பாதுகாக்கும் இயக் கம். உங்களுக்கு இந்த இயக்கம் பாதுகாப்பாக இருக்கும்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

தொழுகைக்காக பேச்சை நிறுத்தினார்

சாத்தான்குளம் வேலன் புதுக்குளத்தை சேர்ந்த மருதையா- முத்தம்மாள் தம்பதியின் ஆண் குழந்தைக்கு ஜெய்சசிகரன் என்று டி.டி.வி.தினகரன் பெயர் சூட்டினார். தொடர்ந்து டி.டி.வி. தினகரன் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து இரவு குற்றாலத்தில் நிறைவு செய்தார்.

டி.டி.வி. தினகரன் மேலப்பாளையம் பஜார் திடலில் பேசுவதற்காக திறந்த வேனில் வந்தார். அப்போது அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடந்து கொண்டிருந்தது. உடனே அவர் பேசுவதை தவிர்த்து விட்டு அனைவரையும் அமைதியாக இருக்கும் படியும் கூறினார். தொழுகை முடிந்த பிறகு அவர் தலையில் முஸ்லிம்கள் அணியும் தொப்பியை அணிந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சமால், தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா, நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், முன்னாள் துணை மேயர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

17 எம்.எல்.ஏ.க்கள்

முன்னதாக டி.டி.வி. தினகரன் நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதிமன்றத்தின் மீது 17 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வைத்து வழக்கை தொடர்ந்து நடத்துவார்கள். தங்க தமிழ்செல்வன் வழக்கை வாபஸ் பெற்று விட்டு தேர்தலை சந்திக்க முடிவெடுத்து உள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பாக நீதிமன்றத்தில் போராடுவோம். நிச்சயம் சபாநாயகர் முடிவு தவறு என்பதை நிரூபித்து விட்டு மக்கள் மன்றத்தில் மக்களை சந்திப்பார்கள்.

தமிழக அமைச்சர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தாயாக, தெய்வமாக இருக்கும் அம்மாவையே இப்படி அவமரியாதை செய்து பேசுவது என்பது, அவர்கள் சராசரி மனநிலையில் இல்லை என்பதை காட்டுகிறது. நான் தினமும் தொண்டர்களையும், மக்களையும் சந்தித்து வருகிறேன். அம்மாவின் தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். அம்மாவின் ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் தமிழகத்தில் அமைக்கும். மக்கள் ஆதரவோடு ஆட்சி அமைப்போம். அப்போது இரட்டை இலையையும், கட்சியையும் மீட்டெடுப்போம்.

ஸ்டெர்லைட் பிரச்சினை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் போராட்ட குழுவினருக்கு வக்கீலாக இருப்பவரை கைது செய்து உள்ளனர். இது அரசின் தவறான நடவடிக்கை. துப்பாக்கி சூட்டை மறைக்க, படுகொலை சம்பவத்தை திசை திருப்ப இது போன்ற கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர். அதுபோல மக்களுக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டில் செய்யக்கூடாது என்பது அனைத்து கட்சிகளின் கோரிக்கை. ஜனநாயக முறைப்படி போராடுகிறவர்கள் மீது அடக்கு முறைகளை செய்வது கண்டிக்கத்தக்கது.

சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்கு எதிராக மக்கள் போராடுகின்றனர். அது முதல் -அமைச்சரின் சொந்த மாவட்டம் ஆகும். அந்த சாலை திட்டம் தேவை என்றால் முதல்-அமைச்சரே நேரடியாக சென்று மக்களை சந்தித்து பேசி சமாதானப்படுத்த வேண்டும். இயற்கையையும், விவசாயத்தையும் அழிக்காமல் இந்த திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும்.

அவசர சிகிச்சை பிரிவுக்கு...

எச்.ராஜா மக்கள் விரோத வார்த்தைகளை பேசிக் கொண்டு, மக்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பது வழக்கம். அதுபோன்று அவரது பேச்சுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மனிதன் நோய்வாய்ப்பட்டு ஒவ்வொரு உறுப்பாக செயல் இழப்பது போன்று இந்த அரசும் ஒவ்வொரு பகுதியாக சேதாரம் ஆகி விரைவில் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் நேரம் நெருங்கி விட்டது. அதுவரை காத்திருங்கள்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story