உடல் முழுவதும் காயத்துடன் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி கூடலூரில் புலி சாவு


உடல் முழுவதும் காயத்துடன் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி கூடலூரில் புலி சாவு
x
தினத்தந்தி 21 Jun 2018 10:45 PM GMT (Updated: 21 Jun 2018 7:31 PM GMT)

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் உடல் முழுவதும் காயத்துடன் சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது. இது போல் கூடலூரில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகம் சேக்கல்முடி புதுக்காடு எஸ்டேட் 1-ம் நம்பர் தேயிலை தோட்டம் உள்ளது. அங்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது உடல் முழுவதும் காயத்துடன் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் உத்தரவின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் இறந்து கிடந்த சிறுத்தைப்புலியை மீட்டு மானாம்பள்ளி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் கூறுகையில், இறந்து கிடந்த ஆண் சிறுத்தைப்புலிக்கு 5 வயது இருக்கலாம். உடல் முழுவதும் காயம் இருப்பதால் மற்ற வனவிலங்குகளுடன் ஏற்பட்ட சண்டையில் சிறுத்தைப்புலி இறந்திருக்கலாம். இன்று (வெள்ளிக் கிழமை) கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு இறந்த சிறுத்தைப்புலியின் உடல் பரிசோதனை செய் யப்படும். அதன்பிறகு தான் சிறுத்தைப்புலி இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றார். புலி தாக்கியதால் இறந்த சிறுத்தைப் புலியை, செந்நாய்கள் கடித்து குதறியதால் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா பாடந்தொரை அருகே கடசனக்கொல்லி வனப்பகுதி உள்ளது. இங்கு வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று பகல் 2 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஆண்புலி ஒன்று இறந்துகிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் கூடலூர் கோட்ட வன அலுவலர் ராகுல், வனச்சரகர் ராமகிருஷ்ணன், வன காப்பாளர்கள் பிரகாஷ், பிரதீப் உள்பட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

ஆனால் புலி எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. புலி இறந்து கிடந்த இடம் காட்டு யானை, அட்டைப்பூச்சிகள் அதிகம் இருக்கும் அடர்ந்த வனப்பகுதி ஆகும். இதனால் வனத்துறையினர் சிரமங்களுக்கு ஆளானார்கள்.

இதன் காரணமாக புலியின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பாதுகாப்பு கருதி புலியின் உடலை கூடலூர் ஈட்டிமூலா வன சரக அலுவலகத் திற்கு வனத்துறையினர் கொண்டு வந்தனர். அங்கு வருவதற்கு இரவு ஆகிவிட்டதால் பிரேதபரிசோதனை நடைபெற வில்லை.

இன்று (வெள்ளிக்கிழமை) புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த அறிக்கை கிடைத்த பிறகே புலி எப்படி இறந்தது என்பது தெரியவரும். வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் புலிக்கு 10 வயது இருக்கும் என்று வன சரகர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Next Story