கழிவு தென்னை நாரில் உரம் தயாரிப்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி


கழிவு தென்னை நாரில் உரம் தயாரிப்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
x
தினத்தந்தி 22 Jun 2018 3:30 AM IST (Updated: 22 Jun 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி பகுதியில் கழிவு தென்னை நாரில் உரம் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டி பகுதியில் கழிவு தென்னை நாரில் வரும் கடைசி கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக மட்டை கம்பெனி சார்பில் கழிவு தென்னை நார்களை கொண்டு மாடி தோட்டத்திற்காக உரம் தயாரிக்க தென்னை நாரின் கழிவுகளை உலர்த்தி அதில் இருந்து 5 கிலோ எடை கொண்ட அளவு கேக் வடிவில் வெட்டப்பட்டு மாடி தோட்ட செடிகளுக்கு பயன்படுத்த வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

குடிசைத் தொழில் போல் நடைபெறும் இத்தொழிலில் இப்பகுதிகளைச் சேர்ந்த பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக சிங்கம்புணரி பகுதியில் சுமார் 5 இடங்களிலும், பொள்ளாச்சி, திண்டுக்கல், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களில் இந்த கழிவு தென்னை நார் உலர்த்தப்பட்டு மாடி தோட்ட உரத்திற்கு கேக் வடிவில் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அரசினம்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டி கூறியதாவது:- தென்னை மட்டை கம்பெனி மூலம் கழிவு தென்னை நார்களை எடுத்து அதை ஒரு இடத்தில் மொத்தமாக டன் கணக்கில் வைத்து அதில் உப்பு கலக்காத சுத்தமான நீரில் ஊர வைத்து பின்னர் ஒரு சில நாட்களுக்கு பிறகு ஊர வைத்த கழிவு நார்களை வெயிலில் உலர்த்த வேண்டும். சிறு ஈரம் கூட இல்லாமல் உலர்த்தப்பட்ட இந்த கழிவு தென்னை நார்கள் 5 கிலோ, 4 கிலோ என கேக் வடிவில் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட இந்த உரத்தை ஏஜெண்டுகள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

குறிப்பாக சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 47 நாடுகளுக்கு அனுப்பப்படும் இந்த தென்னை கழிவுகளில் இருந்து தயார் செய்த கேக் வடிவிலான உரம் மாடித் தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாள் ஊற்றுகிற நீர் இந்த கழிவு நார் உரத்தால் ஈரத்தன்மை 10 நாட்கள் வரை செடிகளுக்கு கிடைக்கும், வேர்களுக்கு உரமாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு நன்கு வெயில் அடித்தால் சுமார் 2 டன் வரை தென்னை கழிவு நாரில் உரம் தயாரிக்கலாம். தமிழகத்தில் இருந்து கிலோ ரூ.10,13, 15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வெளிநாடுகளில் கிலோ ரூ.50 மற்றும் ரூ.60-க்கு விற்பனையாகிறது. இந்த தொழில் செய்வதற்கு முக்கிய தேவை சுமார் 2 ஏக்கர் நிலப்பகுதி, 5 வேலையாட்கள் மற்றும் சுத்தமான உப்பில்லா நீர் ஆகியவை போதும். குடிசை தொழிலாக செய்து வரும் இந்த தொழிலுக்கு அரசு நிதி உதவி வழங்கினால் இன்னும் இத்தொழில் பல்வேறு இடங்களில் விரிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story