உச்சிப்புளியில் பயணிகள் விமான நிலையம் மத்திய மந்திரி உறுதி
உச்சிப்புளியில் பயணிகள் விமானநிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து மந்திரி, அமைச்சர் மணிகண்டனின் மனுவை ஏற்று உறுதி அளித்துள்ளார்.
ராமநாதபுரம்,
இந்தியாவில் 115 மாவட்டங்களை தேர்வு செய்து வளர்ந்துவரும் மாவட்டமாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் படி ராமநாதபுரம்,விருதுநகர் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வளர்ந்துவரும் ராமநாதபுரம் மாவட்டத்தின் நீண்டகால கோரிக்கையான மருத்துவகல்லூரி மற்றும் பயணிகள் விமான நிலையம் ஆகியவற்றை நிறைவேற்ற மாவட்ட அமைச்சர் டாக்டர் மணிகண்டன் நடவடிக்கை எடுத்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் பயனாக தற்போது மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமான நிலையத்தினை பயணிகள் விமான நிலையமாக மாற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் அந்த திட்டம் மேற்கொண்டு தொடரப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது இந்த திட்டத்தினை உதான் திட்டத்தில் நிறைவேற்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதன்படி உச்சிப்புளி கடற்படை விமான தளத்தினை 8 ஆயிரம் அடி நீளத்தில் விமான ஓடுதளம் அமைத்து பயணிகள் விமான நிலையமாக மாற்ற பரீசிலிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வளர்ந்து வரும் மாவட்டங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் டாக்டர் மணிகண்டன், சென்னை வந்த மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ்பிரபுவை நேரில் சந்தித்து உச்சிப்புளியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனை பெற்றுக்கொண்ட மத்திய மந்திரி புண்ணிய தலமான ராமேசுவரத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டும், மாவட்டத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டும் விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story