மணல் குவாரியை மூட வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 55 பெண்கள் கைது
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் இயங்கி வரும் மணல் குவாரியை மூட வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 55 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆறு ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆற்றின் கரைகளில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் அனுப்பப் பட்டு குழாய்களில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆற்றை நம்பி விளைநிலங்களும் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இங்கு மணல் குவாரியை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊத்துக்கோட்டையில் அனைத்து கடைகளும் மூடபட்டன.
அனைத்து கட்சி தொண்டர்கள் கலந்து கொண்ட மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது.
கைது
இந்த நிலையில் மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்று கூறி ஊத்துக்கோட்டை அண்ணாசிலை அருகில் நேற்று மதியம் தி.மு.க. மகளிர் அணியை சேர்ந்த சாந்தி, மகளிர் குழு தலைவி குமுதா ஆகியோர் தலைமையில் ஏராளமான பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 55 பெண்களை கைது செய்து ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story