தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Jun 2018 4:00 AM IST (Updated: 22 Jun 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க தடை விதிப்பதுடன், இதுபற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மரியஜேசுஜோயல்ராஜா, மகாராஜா, பூல்பாண்டி, சக்திவேல், கருப்பசாமி, முத்துகுமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தினர். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பாகவே அந்த வளாகத்தில் நின்றிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. இதை காரணமாக வைத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையின் பாதுகாப்பு பிரிவு தலைவராக முன்னாள் ஏ.டி.ஜி.பி. அலெக்ஸாண்டர் உள்ளார். இவர் தனக்கு கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை ஸ்டெர்லைட் பாதுகாப்பு பிரிவில் பணிக்கு சேர்த்துள்ளார். இப்பிரிவு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க 3-ம் தர நடவடிக்கைகளை மேற்கொண்டது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் அலெக்ஸாண்டர் பேசியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் அலெக்ஸாண்டருக்கும், அவருடைய ஆட்களுக்கும் பெரிய அளவில் பங்கு உள்ளது.

இதன் காரணமாகவே ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் முன்னிலை வகித்தவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பேரணி சென்றவர்கள் கலெக்டர் அலுவலகத்தை அடையும் முன்பாகவே போலீசாரால் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கலெக்டருக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் இருவரும் உள்நோக்கத்துடன் செயல்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் கீழ் உள்ள அதிகாரிகளை சிக்கவைத்துவிட்டு தாங்கள் தப்பிப்பதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு போலீசாரின் திட்டமிட்ட படுகொலை. இதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க தடை விதிக்க வேண்டும். சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இதுபோன்ற வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story