தஞ்சையில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி நடவடிக்கை எடுக்கப்படுமா?


தஞ்சையில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 22 Jun 2018 4:00 AM IST (Updated: 22 Jun 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். உடனே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை சிவகங்கை பூங்காவில் சுற்றித்திரியும் குரங்குகள் அவ்வப்பொழுது தஞ்சை நகருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ்நகர் வடக்கு தெரு, எம்.கே.மூப்பனார் சாலை, கீழவாசல் டபீர் குளம் ரோடு மற்றும் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் புகுந்து பூட்டியிருக்கும் வீடுகளில் ஜன்னல் வழியாக நுழைந்து விடுகின்றன. பின்னர் அங்கு இருக்கும் பொருட்களை தின்றும், சிதறவிட்டும் சேதப்படுத்துகின்றன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் புகுந்த குரங்குகள் அங்கு உள்ள குளிர்சாதன பெட்டியை திறந்து பழங்களை தின்றும், மின்சார வயர்களை சேதப்படுத்தியும் சென்றன.

தஞ்சையில் நேற்று பொதுமக்கள் அலுவலகம் மற்றும் கடைகளுக்கு செல்லும் பரபரப்பான காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சாலையை கடந்த குரங்குகள் ஒவ்வொரு கடை மற்றும் அலுவலகமாக ஏறி, இறங்கின. பூட்டியிருந்த இடங்களில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தும், பொதுமக்களை அச்சுறுத்தியும் கால்போன போக்கில் குரங்குகள் சென்றன. இதை பார்த்த பொதுமக்கள் கம்பு மற்றும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு விரட்டியடித்தனர்.

ஆனால் குரங்குகள் சற்றும் பயப்படாமல் பொதுமக்களை விரட்டிச்சென்று பயமுறுத்தின. இதனால் தஞ்சை மக்கள் பெரிதும் பீதியடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story