பாளை. சிறையில் இறந்தவரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யவேண்டிய அவசியம் இல்லை


பாளை. சிறையில் இறந்தவரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யவேண்டிய அவசியம் இல்லை
x
தினத்தந்தி 22 Jun 2018 3:15 AM IST (Updated: 22 Jun 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியை சேர்ந்த செல்வசவுந்தர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது.

மதுரை,

‘எனது சகோதரர் பரத் என்கிற பரத்ராஜா ஆயுள்தண்டனை கைதியாக கடந்த 2003-ம் ஆண்டு முதல் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். என்னுடைய மற்றொரு சகோதரரின் திருமணத்துக்காக கடந்த மாதம் 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பரோலில் வந்திருந்தார். இந்தநிலையில் 22-ந்தேதி தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் பங்கேற்றதாக என்னையும், என்னுடைய சகோதரர் பரத்ராஜாவையும் போலீசார் கைது செய்து தூத்துக்குடி ஜெயிலில் அடைத்தனர். பின்னர் பரோல் முடிந்ததால் பரத்ராஜாவை பாளை. சிறைக்கு மாற்றினர்.

இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி அவர் உடல்நலம் மோசமடைந்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரை பார்க்கச் சென்றபோது உடலில் பல்வேறு காயங்கள் இருந்தன. அவரது மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதற்கிடையே அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து முடித்தனர். அவரது உடலை மறுபிரேத பரிசோதனை செய்தால் தான் இறப்புக்கான காரணம் தெரியவரும். எனவே பரத்ராஜாவின் உடலை தடயஅறிவியல் துறை பேராசிரியர்கள் தலைமையில் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த கோர்ட்டு, பரத்ராஜாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை முடிவில், பரத்ராஜாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story