திருச்சியில் பல்வேறு இடங்களில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தல்


திருச்சியில் பல்வேறு இடங்களில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தல்
x
தினத்தந்தி 22 Jun 2018 4:15 AM IST (Updated: 22 Jun 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச யோகா தினத்தையொட்டி திருச்சியில் பல இடங்களில் நேற்று யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மாணவ-மாணவிகள், பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்று யோகாசனங்கள் செய்து அசத்தினர்.

திருச்சி,

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் 2015-ம் ஆண்டில் இருந்து சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று 4-வது ஆண்டாக சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி திருச்சி மாநகராட்சி, ஹலோ எப்.எம். மற்றும் மான்சா யோகா ஸ்டூடியோ சார்பில் ‘யோகாத்தான் -2018’ என்ற யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், குடியிருப்பு நல சங்கங்கள், மாநகராட்சி ஊழியர்கள், ஹலோ எப்.எம். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மான்சா யோகா மையத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் பல்வேறு ஆசனங்களை கற்று கொடுக்க அதை அனைவரும் பின்பற்றி பயிற்சி செய்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் யோகா பயிற்சி பற்றிய குறிப்புகள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆணையர் ரவிச்சந்திரன் பேசுகையில், மாநகராட்சியின் தூய்மை பணிகள், சமீபத்தில் திறக்கப்பட்ட உடற்பயிற்சி சாதனங்கள் அடங்கிய பூங்காக்கள் மற்றும் யோகாவின் சிறப்புகள் பற்றி குறிப்பிட்டார். யோகா பற்றிய பயிற்சியாளர்களின் அறிவுரைகள், ஆணையர் பேட்டி மற்றும் விழா தொகுப்பினை ஹலோ எப்.எம். வானொலியில் ஒலிபரப்பியது. இந்நிகழ்ச்சியை போத்தீஸ், ஸ்ரீ சங்கீதாஸ் வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட், மேக்னா இமிட்டேஷன் ஜுவல்லரி, ஸ்பேஸ் ரேக், ஸ்ரீ ராமா ஜுவல்லரி மார்ட் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

இதேபோல, திருச்சியில் உள்ள பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர். திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் மாணவ, மாணவிகள், செவிலியர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி காமராஜ் கலந்து கொண்டு யோகாசனங்களால் உடலுக்கும், மனதுக்கும் கிடைக்கும் பலன்கள் பற்றி பேசினார்.திருச்சி கே.கே. நகரில் உள்ள ஒரு சிறப்பு பள்ளியில் நடந்த யோகாசன நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சுவாமி நாதன் தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பலர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். நேரு இளைஞர் மன்றம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள இளைஞர் விடுதியில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி) நடந்த சர்வதேச யோகா தின விழாவுக்கு இயக்குனர் மினிஷாஜி தாமஸ் தலைமை தாங்கினார். இதில் பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள், ஹேக்கத்தான் இறுதிப் போட்டியில் பங்கேற்று உள்ள ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.திருச்சி மண்டல ரெயில்வே பயிற்சி பள்ளியில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதய்குமார் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் ரெயில்வே பணிமனை தொழிலாளர்கள், கோட்ட ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

Next Story