சென்னையில் கோவில் குளத்தை மீட்க கோர்ட்டு உத்தரவு: ராம.கோபாலன் அறிக்கை


சென்னையில் கோவில் குளத்தை மீட்க கோர்ட்டு உத்தரவு: ராம.கோபாலன் அறிக்கை
x
தினத்தந்தி 22 Jun 2018 3:02 AM IST (Updated: 22 Jun 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கோவில் குளத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக செயலாற்ற வேண்டும் என்று ராம.கோபாலன் கூறியுள்ளார்.

சென்னை, 

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை வடபழனியில் உள்ள வேங்கீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான குளத்தை தனியாருக்கு தாரை வார்த்து, அதனை வணிக வளாகமாக மாற்றினர். இதனை எதிர்த்து கடந்த 30 ஆண்டுகளாக இந்து முன்னணி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது.

இந்தப் பிரச்சினையை சட்ட ரீதியாக தீர்க்க, சென்னை ஐகோர்ட்டிற்கு கொண்டு சென்றவர் தியாகி நெல்லை ஜெபமணியின் மகன் மோகன்ராஜ். காவல்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர், தனது தந்தையைப்போல சமூக நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறார். அவரது அளப்பரிய முயற்சியால், அந்த இடம் நீர்நிலை எனவும், அதனை மீட்டெடுக்க இந்து சமய அறநிலையத்துறை, பொதுப் பணித்துறை, வட்டாட்சியர், காவல்துறை ஆகிய துறைகள் சேர்ந்து செயல்பட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மோகன்ராஜை இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது.

நீதிமன்றங்கள், ஆலயச் சொத்துக்கள் ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது எனவும், குளங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கி, அதனை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். இனியாவது, இந்து சமய அறநிலையத்துறை அந்தத் திருக்குளத்தை மீட்டெடுக்க உடனடியாக செயலாற்ற வேண்டும். அக்குளம் மீண்டும் உயிர்பெற்று எழ இந்து முன்னணி தொடர்ந்து பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story