வங்கி பெட்டியில் போட்ட காசோலையை திருடி நூதனமுறையில் ரூ.1.40 லட்சம் மோசடி செய்தவர் கைது
கொட்டிவாக்கத்தில் வங்கி பெட்டியில் போட்ட காசோலையை திருடி நூதன முறையில் ரூ.1.40 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் கற்பகம்மாள் நகரை சேர்ந்தவர் சித்ரா. இவருக்கு கொட்டிவாக்கத்தில் உள்ள 2 வங்கிகளில் கணக்குகள் இருக்கின்றன. கடந்த மாதம் 28-ந் தேதி தன்னுடைய ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு மாற்ற ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கான காசோலையை கொட்டிவாக் கத்தில் உள்ள பிரபல வங்கியின் பெட்டியில் போட்டார்.
இரு நாட்கள் கழித்து வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் எடுக்கப்பட்டதாக சித்ராவின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. ஆனால் மற்றொரு வங்கியின் கணக்கில் பணம் ஏறவில்லை. இதுபற்றி கேட்ட போது வங்கியில் அதிகாரிகள் முறையாக பதில் கூறாததால் அடையாறு போலீஸ் துணை கமிஷனர் ஷேசன்சாயிடம் நூதன மோசடி குறித்து சித்ரா புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணை
இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க நீலாங்கரை போலீசாருக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டார். நீலாங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இரு வங்கிகளிலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது சித்ரா பெட்டியில் காசோலையை போட்டுவிட்டு சென்றபின்னர் அதை ஒருவர் எடுத்ததை போலீசார் கண்டனர்.
அதை வைத்து காசோலையை திருடிய ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமாரை (வயது 42) போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சுரேஷ்குமார் கூறுகையில், 28-ந்தேதி அந்த வங்கியில் சுற்றிக்கொண்டு இருந்தபோது ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கான காசோலையை ஒரு பெண் போட்டு சென்றதை கண்டேன். பின்னர் அதை திருடி வங்கி ஊழியர்களிடம் காசோலையில் தவறாக எழுதிவிட்டேன் என கூறி வேறு காசோலையை வாங்கினேன். அதில் சித்ரா என்று இருந்த பெயரை சிதம்பரம் என மாற்றி பணத்தை எடுத்தேன் என்றார்.
கைது
சுரேஷ்குமார் ஏற்கனவே ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஒருவரின் காசோலையை மாற்றி ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்து 2014-ம் ஆண்டு சிறை சென்றுள்ளார். இதுவரை 25 பேரின் காசோலையை மாற்றி மோசடி செய்து ரூ.30 லட்சம் வரை எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.85 ஆயிரம், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி காசோலை புத்தகங்கள், ஏ.டி.எம். அட்டைகள், ஓட்டுனர் உரிமங்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story