மண்டியா நகரசபை தலைவர் மாரடைப்பால் மரணம் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி


மண்டியா நகரசபை தலைவர் மாரடைப்பால் மரணம் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 22 Jun 2018 3:30 AM IST (Updated: 22 Jun 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

மண்டியா நகரசபை தலைவர் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவருடைய உடலுக்கு கவுன்சிலர்கள், மண்டியா மாவட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத

மண்டியா, 

மண்டியா நகரசபை தலைவர் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவருடைய உடலுக்கு கவுன்சிலர்கள், மண்டியா மாவட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நகரசபை தலைவர்

மண்டியா நகரசபை தலைவராக இருந்தவர் ஒசஹள்ளி போரேகவுடா (வயது 52). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், நேற்று முன்தினம் இரவு ஒசஹள்ளி கிராமம் பிசிலு மாரம்மா கோவில் அருகே உள்ள தனது வீட்டில் தனியாக இருந்தார். அவருடைய குடும்பத்தினர் ஐதராபாத்துக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

இதனால் தனியாக இருந்த போரேகவுடா, இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டு இருந்தார். நேற்று காலை 7.30 மணிக்கு மண்டியாவில் உள்ள விசுவேஸ்வரய்யா மைதானத்தில் நடக்க இருந்த உலக யோகா தினத்தில் அவர் கலந்துகொள்ள இருந்தார்.

மாரடைப்பால் மரணம்

இந்த நிலையில் நேற்று காலை மண்டியா நகரசபை கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் அவரை அழைப்பதற்காக ஒசஹள்ளிக்கு வந்தனர். வெகு நேரமாகியும் எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த அவர்கள், போரேகவுடாவை எழுப்பினார்கள். ஆனால் எழுந்திருக்கவில்லை. மயக்க நிலையில் இருந்த போரேகவுடாவை அவர்கள் மண்டியா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், போரேகவுடா மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அப்போதே அவர் இறந்துவிட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி உடனடியாக, ஐதராபாத்துக்கு சுற்றுலா சென்றிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்தவுடன் அவருடைய இறுதி சடங்குகள் நடைபெறும். போரேகவுடாவின் மறைவு காரணமாக நேற்று மண்டியாவில் நடந்த யோகா நிகழ்ச்சியில், அவருக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மூத்த உறுப்பினர்

4 முறை கவுன்சிலராக இருந்த போரேகவுடா, மண்டியா நகரசபையின் மூத்த உறுப்பினராவார். 1990–ம் ஆண்டு வாக்கில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பான போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்றதன் மூலம் பொதுவாழ்வில் நுழைந்தார். காவிரி தொடர்பான போராட்டங்களுக்காக மக்களை அணி திரட்டுவதன் மூலம் அவர் அனைவராலும் அறியப்பட்டார்.

பின்னர் அவர் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டு பொதுசேவையில் ஈடுபட தொடங்கினார். தீவிர காங்கிரஸ் தொண்டரான அவர், கடந்த 2013–ம் ஆண்டு நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2016–ம் ஆண்டும் 2–வது முறையாக நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி

போரேகவுடாவின் உடல் அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு மண்டியா மாவட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


Next Story