பள்ளி பாடத்தில் யோகாவை சேர்த்தால் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
மும்பை,
பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
யோகா தினம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மும்பையில் வெகுவிமரிசையாக யோகா பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மும்பை கடற்படை தளத்தில் கடற்படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டு பிரமாண்ட யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நீர்மூழ்கி கப்பலிலும் யோகா பயிற்சி செய்து அசத்தினர்.
மும்பை பாந்திராவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று யோகாசனத்தில் ஈடுபட்டார். இதையடுத்து உரையாற்றிய அவர் கூறியதாவது:-
நேர்மறையான எண்ணங்களுக்கு யோகா பழக்கம் மிகவும் முக்கியமானதாகும். மாறிவரும் வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து விடுபட யோகா உதவிகரமாக இருக்கும். பள்ளிகளின் பாடத்திட்டத்தில் மட்டும் யோகாவை சேர்ப்போமானால் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவது சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிகழ்ச்சியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ, மும்பை பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆஷிஸ் செலார், மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகர் ஆகியோரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பயிர்க்கடன் தள்ளுபடி தீர்வாகாது
இதைத்தொடர்ந்து புனே சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அங்குள்ள வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிர்வாக கல்லூரியில், ‘லாபகரமான மற்றும் நிலையான’ விவசாயம் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாகாது. நீண்டகால அளவில் பயிர்க்கடன் தள்ளுபடி வேளாண்துறை மற்றும் விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பையே ஏற்படுத்தும். விவசாயத்துடன் கோழி வளர்ப்பு மற்றும் பால் பண்ணை ஆகியவற்றையும் செய்து வந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை’ என தெரிவித்தார்.
இந்த கருத்தரங்கில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story