ஈரோட்டில் அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம்
ஈரோட்டில் நடந்த, அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்தும் சிறப்பு முகாமை கலெக்டர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.
ஈரோடு,
அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் உள்ள வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்கான கால அவகாசம் வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் படி இணையதளம் மூலம் பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும், பொதுமக்களின் வசதிக்காக அந்தந்த கிராமப்புறங்களில் வட்டார வளர்ச்சி அதிகாரி, பேரூராட்சி செயல் அதிகாரி, மாநகராட்சி அல்லது நகராட்சி ஆணையாளர்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நகர் ஊரமைப்பு துறை மற்றும் ஈரோடு மாநகராட்சி சார்பில் அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் ஈரோடு பவானி ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
முகாமை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார். ஈரோடு மாநகராட்சி 1, 2-வது மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.
இதில் தங்களது மனைகளை வரன்முறைப்படுத்த ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் காலையில் இருந்தே கூட்டம் அலைமோதியது.
ஆன்லைன் பதிவுக்கு தனி இடமும், அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்க்க தனி இடமும் ஒதுக்கப்பட்டு இருந்தது. முகாமில் ஊரக திட்டக்குழு உதவி இயக்குனர் விஜயன், மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர் சண்முகவடிவு, பொறியாளர்கள் பாஸ்கரன், ஆனந்தன், கோவிந்தராஜ், தனுஷ்கோடி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள். இதையொட்டி கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story