லாரிகள் வேலைநிறுத்தம்; விளைச்சல் குறைவு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர்ந்து உயருகிறது


லாரிகள் வேலைநிறுத்தம்; விளைச்சல் குறைவு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர்ந்து உயருகிறது
x
தினத்தந்தி 22 Jun 2018 4:07 AM IST (Updated: 22 Jun 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

லாரிகள் வேலைநிறுத்தம் மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னை, 

டீசல் விலை தினசரி உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். 4-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய் கறிகளை ஏற்றி வரும் லாரிகள் வரத்து குறைந்து இருக்கிறது. ஏற்கனவே விளைச்சல் குறைந்துள்ள நிலையில், தற்போது லாரிகள் போராட்டம் காரணமாக காய்கறி விலை அதிகரித்து உள்ளது.

இதனால் காய்கறி வாங்க வரும் பொதுமக்களின் கூட்ட மும் குறைந்து வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நல வாழ்வு சங்க செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது:-

ரூ.8 வரை அதிகரிப்பு

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 300 முதல் 350 லாரிகள் மூலம் காய்கறி வரத்து இருந்து வந்தது. தற்போது லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 250 லாரிகள் வரை மட்டுமே வருகிறது. ஏற்கனவே விளைச்சல்-வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை அதிகரித்தது.

இந்தநிலையில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் காய்கறி விலை 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் அனைத்து காய்கறி விலையும் ரூ.2 முதல் ரூ.8 வரை விலை உயர்ந்திருக்கிறது. லாரி உரிமையாளர்கள் போராட்டம் தீவிரம் அடையும் பட்சத்தில் காய்கறி விலை இன்னும் உயர வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறிய வாகனங்களில்...

கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர் பழக்கடை ஜெயராமன் கூறியதாவது:-

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக 250 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள இடங்களில் இருந்து சிறிய ரக வாகனங்கள் மூலம் பழங்கள் வரத்து இருக்கிறது. விலையில் பெரிதளவில் மாற்றம் இல்லை என்றாலும் வியாபாரம் மந்தநிலையில் உள்ளது. விளைச்சலும் குறைந்து இருக்கிறது.

இதனால் பழ வியாபாரிகள் கடுமையாக பாதித்து உள்ளனர். ரம்டான் பழ சீசன் தற்போது நடந்து வருகிறது. பலா மற்றும் நாவல்பழங்களுக்கு அதிக மதிப்பு இருப்பதால் தற்போது மதனப்பள்ளியில் இருந்து சிறிய ரக வாகனங்கள் மூலம் இவ்வகை பழங்கள் கொண்டுவரப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

விலை நிலவரம்

பழங்கள் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்)

வாஷிங்டன் ஆப்பிள் - ரூ.180 முதல் ரூ.200 வரை, சீனா ஆப்பிள் - ரூ.180, சாத்துக்குடி - ரூ.100 வரை, ஆரஞ்சு - ரூ.100 வரை, பலா - ரூ.30 முதல் ரூ.40 வரை, கருப்பு திராட்சை - ரூ.60 முதல் ரூ.70 வரை, விதையில்லா திராட்சை - ரூ.80 முதல் ரூ.90 வரை, நாவல்பழம் - ரூ.50 முதல் ரூ.60 வரை, வாழை (தார்) - ரூ.200 முதல் ரூ.400 வரை, சப்போட்டா - ரூ.40 முதல் ரூ.50 வரை, கொய்யா - ரூ.40 முதல் ரூ.50 வரை. (மாம்பழ வகைகளில்) பங்கனபள்ளி - ரூ.40 முதல் ரூ.50 வரை, ருமானி - ரூ.30, இமாபசந்த் - ரூ.80, மல்கோவா - ரூ.50, நீலம் - ரூ.30, ஒட்டு - ரூ.30 வரை, அத்திபழம் - ரூ.50 முதல் ரூ.60 வரை, ரம்டான் - ரூ.160 முதல் ரூ.180, மங்குஸ்தான் - ரூ.150. 

Next Story