தென் மாவட்டங்களுக்கு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கிடையாது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


தென் மாவட்டங்களுக்கு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கிடையாது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2018 4:14 AM IST (Updated: 22 Jun 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கிடையாது என ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு காவிரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம், காமராஜர் மேல்நிலைப் பள்ளிக்கூடம் மற்றும் திருநகர் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் மாணவ-மாணவிகளின் வருகை பதிவேடு குறித்து ஆய்வு செய்தார். மேலும் அவர் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி பள்ளிக்கூடத்திற்கு தேவைப்படும் கூடுதல் வசதிகள் குறித்தும் அங்கு பணியில் இருந்த ஆசிரிய, ஆசிரியைகளிடம் கேட்டார்.

அதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அரசு நிதி ஒதுக்கி வருகிறது. அரசு பள்ளிக்கூடங்களில் உள்ள குறைபாடுகள் என்ன? மாணவர்களை கூடுதலாக சேர்க்க என்ன வழிமுறைகள் உள்ளன? என்பது குறித்து ஒவ்வொரு பள்ளிக்கூடங்களாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம்.

பள்ளிக்கூடங்களில் இருக்கக்கூடிய பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து, பள்ளிக்கூடங்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் மூலமாக தெரிந்து கொண்டு அதை நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறது. தற்போது மாணவர்களை பார்க்கும்போது அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது.

ஏனென்றால் இந்த மாணவர்களுக்கு மாற்றப்பட்டு உள்ள சீருடைகள் தனியார் பள்ளிக்கூடங்களை மிஞ்சுகின்ற அளவுக்கு உருவாக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிக்கூடங்களுக்கு செல்வது போன்ற உணர்ச்சிகள் அவர்களிடத்தில் உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புதிதாக கொண்டு வரப்பட்டு உள்ள பாடத்திட்டமானது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சுகின்ற அளவுக்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் சிறந்த கல்வியாளர்களாக உருவாக்குவதற்கும், ஒழுக்கத்தோடு கல்வியை கற்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பவானி, ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் இன்று (நேற்று) ஆய்வு நடைபெற்று உள்ளது. இந்த ஆய்வின் மூலம் என்னென்ன குறைபாடுகள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு, இந்த குறைபாடுகள் எதிர்காலத்தில் களைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 தென் மாவட்டங்களில் கூடுதல் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். எனவே அங்கு மீண்டும் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க இயலாது. மேலும் வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது என்பதுடன், தென் மாவட்டங்களில் ஆசிரியர்கள் கூடுதலாக இருக் கிறார்கள் என்பதையும் உணர்ந்து தான், எந்தெந்த மாவட்டங்களிலே ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறதோ அந்த மாவட்டங்களுக்கே ஆசிரியர் பணியிட மாறுதல் வழங்கலாம் என்ற உத்தரவை அரசு வழங்கி உள்ளது. எனவே வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆசிரியர் கள் பணியிட மாறுதல் கிடையாது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Next Story