புதுச்சேரியில் சாலை விபத்துகள் குறைந்துள்ளது போலீஸ் டி.ஜி.பி. பெருமிதம்


புதுச்சேரியில் சாலை விபத்துகள் குறைந்துள்ளது போலீஸ் டி.ஜி.பி. பெருமிதம்
x
தினத்தந்தி 22 Jun 2018 4:40 AM IST (Updated: 22 Jun 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

புதுச்சேரி,

புதுவை நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக 7 இடங்களில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி சிக்னல் பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து போலீஸ் பூத் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ் தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் கலந்துகொண்டு புதிய போலீஸ் பூத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுவையில் விபத்துகளை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறைய சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 15 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன. விபத்துகள் குறைய பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்புதான் முக்கிய காரணம். விரைவில் மேலும் பல போலீஸ் பூத்துகள் திறக்கப்படும். எனக்கு டெல்லிக்கு இடமாற்றம் வந்துள்ளது. இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் பேசினார்.

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா பேசும்போது, புதுவை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரும் பகுதி. அவர்களிடம் இருந்து புகார்கள் எதுவும் வராத அளவுக்கு ஆட்டோ டிரைவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர்கள் மாறன், வரதராஜன், ராஜசேகர வல்லாட், தனசேகரன், தங்கமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story