சமூக வலைத்தள பயன்பாடு: ஏழாம் இடத்தில் இந்தியா


சமூக வலைத்தள பயன்பாடு: ஏழாம் இடத்தில் இந்தியா
x
தினத்தந்தி 22 Jun 2018 10:26 AM IST (Updated: 22 Jun 2018 10:26 AM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் 150 கோடிக்கும் அதிகமானோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

பேஸ்புக், டுவிட்டர், மை ஸ்பேஸ் உள்ளிட்ட 10 சமூக வலைத்தளங்கள் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுவை. இதில் பேஸ்புக்கிற்கு மட்டும் 50 கோடிக்கும் மேலான பயனாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்களும் இளைஞர்களும்தாம். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா 7-வது இடத்தில் இருக்கிறது.

சமூக வலைத்தளங்களை இவ்வளவு பேர் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அது மிகச் சுதந்திரமான களமாக இருப்பதுதான். அதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ள முடியும். உலகமயமாக்கலால் தனித்தனி மனிதர்களாகச் சுருங்கிப் போய்விட்ட சமூகத்தைச் சமூக வலைத்தளங்கள் ஒன்றிணைக்கின்றன.

பேஸ்புக் நண்பர்கள் சில குழுக்களை அமைத்து நேரடியாகச் சந்தித்து உரையாடுகிறார்கள்; பல்வேறு வகையாகச் செயல்படுகிறார்கள். இது பழங்குடிச் சமூகத்தின் நடவடிக்கையை ஒத்தது என மானுடவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களை ஓர் உயிரியாகப் பாவிக்கிறார்கள். தங்கள் சுக/துக்கங்களை அதனுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அதேநேரம் இந்தச் சமூக வலைத்தளங்கள் இன்றைய சமூகத்தின் மீது ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகளும் ஏராளம்.

பெரும்பாலான பயனாளர்கள் 24 மணி நேரத்தையும் சமூக வலைத்தளங்களைப் பார்ப்பதற்காகச் செலவிடுகிறார்கள். ரெயிலில், பேருந்தில், எங்காவது காத்திருக்கும்போது எப்போது பார்த்தாலும் குனிந்தபடி சமூக வலைத்தளத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மேலே இயங்கிக் கொண்டிருக்கும் புறவுலகம் பற்றி எந்தக் கவனமும் இன்றிச் செல்கிறார்கள்.

ஒரு விஷயம் பற்றிய தாங்கள் எதிர்வினையை சமூக வலைத்தளங்களில் உடனடியாகப் பகிர்ந்துகொள்கிறார்கள். சட்டென நாம் செய்யும் எதிர்வினை பெரும்பாலும் சரியாக இருக்காது. நேரடியான உரையாடல் என்றால் அதை விலக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இங்கு பதிவிடும்போது சம்பந்தப்பட்டவர்களுக்குப் பெரும் மனக் கசப்பு ஏற்படுகிறது. அதுபோலச் சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்கள் ஒருவிதமான கீழ்த்தரமான எண்ணத்துடனே பார்க்கப்படுகிறார்கள். குடும்பப் பெண்கள் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குவைத்திருக்க மாட்டார்கள் என்ற அடிப்படைவாதிகளின் மனோபாவம்தான் இது.

முதலில் சமூக வலைத்தளங்கள் கணக்கு தொடங்குவதற்காகச் சுயவிவரங்களைக் கேட்கிறது. இதை நமக்கு மட்டும் பார்க்கும்படியாக அமைக்க முடியும். ஆனால் அனைவரும் பார்க்கும்படியாகவே எல்லோரும் தருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளம் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் இடையே மிகக் குறுகிய இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது. முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் சாட்டிங் மூலமாக அறிமுகமாகி அவர்களிடம் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அவர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. ஆக, எதிலும் கவனமாக இருந்து நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டால் நல்லது.


Next Story