தூத்துக்குடியில் சூரிய மின்உற்பத்தி திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன் பெறலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
தூத்துக்குடியில் சூரிய மின்உற்பத்தி திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன் பெறலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் சூரிய மின்உற்பத்தி திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன் பெறலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.
கருத்தரங்குதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படாத வறண்ட நிலங்களை பயன்படுத்தி கிராமப்புறங்களில் விவசாயிகளை கொண்டு சூரிய மின் உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பான கருத்தரங்கு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
அவர் பேசியதாவது:–
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தால் விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்படமாட்டாது. மின்சார உற்பத்தியில் கிராமப்புற மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும், இந்த திட்டங்களுக்காக விவசாயிகள் தங்களுடைய நிலங்களை இழக்காமல் தங்களது நிலங்களின் உரிமையாளர்களாக இருக்கலாம். இதன் மூலம் விவசாயிகள் தங்களது வருமானத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டமானது சாகுபடி செய்யப்படாத வறண்ட நிலங்களிலே செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.
அதன் பின்னர், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் பொது மேலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை முதுநிலை மேலாளர் அப்துல்காதர், உதவி பொறியாளர் அமுதா ஆகியோர் இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.