“ஸ்டெர்லைட் ஆலையை இனிமேல் திறக்க முடியாது” மதுரை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் உறுதி
உயர்மட்ட அளவில் கொள்கை முடிவு எடுத்துத்தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை இனிமேல் திறக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் உறுதி அளித்துள்ளார்.
மதுரை,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 22–ந்தேதி நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும், அதில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோருதல், அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோருதல், சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோருதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜயநாராயண் ஆஜராகி வாதாடியதாவது:–
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கும்போது உள்ளூர் திட்ட குழுமத்திடம் அனுமதி பெறப்பட்டது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக புகார் வந்துள்ளது. எனவே இந்த ஆலையின் 2–வது யூனிட்டிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து மூடி உள்ளது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வக்கீல்கள், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான எந்தவிதமான எழுத்துப்பூர்வ உத்தரவையும் தமிழக அரசு தரவில்லை. இந்த சூழ்நிலையில் கோர்ட்டை நாடி மீண்டும் ஆலையை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது“ என்றனர்.
உடனே, நீதிபதிகள், இந்த பிரச்சினையை கொள்கை முடிவாக எடுக்க தமிழக அரசு முன்வரலாமே என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் விஜயநாராயண், “மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பிறப்பித்துள்ள அரசாணை கொள்கை முடிவிற்கு சமமானது. தமிழக அரசின் உயர்மட்ட அளவில் கொள்கை முடிவை எடுத்துத் தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் எப்போதும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. துப்பாக்கி சூடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை ஐகோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. இதில் பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்“ என்று உறுதியளித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வைகோ தொடர்ந்த வழக்கை முடித்து வைப்பதாகவும், துப்பாக்கி சூடு தொடர்பான மற்ற வழக்குகள் அடுத்த மாதம் 11–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.