மத்திய அரசின் 5 நிபந்தனைகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம்: இன்னும் 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்


மத்திய அரசின் 5 நிபந்தனைகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம்: இன்னும் 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்
x
தினத்தந்தி 23 Jun 2018 4:15 AM IST (Updated: 23 Jun 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டம், தோப்பூரில் 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்றும், மத்திய அரசின் 5 நிபந்தனைகளை நிறைவேற்ற தயாராக உள்ளோம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மதுரை,

மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதையொட்டி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று நிலத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவ ராவ், ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வின் போது சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் விதமாக பிரதமர் நரேந்திரமோடி எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். வளர்ந்த மாநிலமாக தமிழகம் இருந்தாலும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு கிடைத்த பெருமை.

பல்வேறு போராட்டங்களுக்கு இடையே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட இருக்கும் தகவலை மத்திய அரசின் நல்வாழ்வுத்துறை இயக்குநர் சஞ்சய்ராய் அறிவித்துள்ளார். தற்போது மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மையம் அமைப்பதற்கான தொடக்கப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக கடந்த 20–ந் தேதி மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவ ராவ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவ மையம் டெல்லிக்கு இணையாக இருக்கும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்னும் 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை இங்கே அமையும். ஏற்கனவே மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள 5 நிபந்தனைகளை நிறைவேற்ற தயார் நிலையில் உள்ளோம். எய்ம்ஸ் மருத்துவமனை 198.27 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைக்கப்படும். மேலூர் குடிநீர் திட்டத்தில் இருந்து 5 எம்.எல்.டி குடிநீர் தேவையான அளவு கிடைக்க வழிவகை செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் உத்தரவாதம் அளித்திருக்கிறார். இருவழித் தடங்களில் 20 மெகாவாட் மின்சாரம் அளிக்க தேவையான பணிகள் தொடங்கத் தயாராக உள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் இருந்து 4 வழிச்சாலையை இணைக்கும் நெடுஞ்சாலை பாதையை அமைக்க தயார் நிலையில் உள்ளோம். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் குழாய்களை 60 அடி தூரத்திற்கு தள்ளி அமைக்க அந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. அனைத்து மத்திய அரசின் நிபந்தனைகளையும் விரைவில் துரிதமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி தாமதமின்றி ‘ஜீரோ டிலே’ வேகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஆக்கப்பூர்வமான பணிகள் தொடங்கி, 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் 50 சிறப்பு மருத்துவப் பிரிவுகள் செயல்படும். 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும். 100 மருத்துவப்படிப்பு இடங்கள் கொண்ட மருத்துவக்கல்லூரி, 60 செவிலியர் இடங்கள் கொண்ட செவிலியர் கல்லூரி இந்த எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமையும். 100 சிறப்பு மருத்துவர்கள் இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிவார்கள்.

ஏற்கனவே பின் தங்கிய மாநிலங்களில் 8 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வந்தாலும், மருத்துவத்தில் சிறப்பு அந்தஸ்தோடு இருக்கும் வளர்ந்த மாநிலமான தமிழகத்தில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கனவான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவது தமிழக மக்களுக்கு கிடைத்த மணி மகுடம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story