கோவில்பட்டியில் பயங்கரம்: தொழிலாளி அடித்துக்கொலை குடிபோதையில் தகராறு செய்ததால் தம்பி வெறிச்செயல்


கோவில்பட்டியில் பயங்கரம்: தொழிலாளி அடித்துக்கொலை குடிபோதையில் தகராறு செய்ததால் தம்பி வெறிச்செயல்
x
தினத்தந்தி 23 Jun 2018 2:15 AM IST (Updated: 23 Jun 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை அடித்துக்கொன்ற தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை அடித்துக்கொன்ற தம்பியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொழிலாளி

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். இவருடைய மனைவி செண்பகவள்ளி. இவர்களுக்கு காளிராஜ் (வயது 26), மகாராசன் (24), சரத்குமார் (22) ஆகிய 3 மகன்கள் உண்டு. இதில் காளிராஜ் சுமை தூக்கும் தொழிலாளி. மகாராசன் ஆட்டோ டிரைவராக உள்ளார். சரத்குமார் ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலை தேடி வருகிறார். ராஜாங்கம் இறந்து விட்டார்.

இதனால் 3 பேரும் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் காளிராஜ் அடிக்கடி குடி போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். நேற்று இரவு உடல்நிலை சரியில்லாததால் செண்பகவள்ளி ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டார்.

அடித்துக்கொலை

அப்போது குடி போதையில் வீட்டுக்கு வந்த காளிராஜ் ரகளையில் ஈடுபட்டார். இதை தட்டிக்கேட்ட சரத்குமாருடன் அவர் தகராறு செய்தார். இதில் இருவரும் கட்டிப்புரண்டு வீட்டுக்குள் உருண்டனர். காளிராஜ் பிடியில் இருந்து விடுபட்டு சரத்குமார் எழுந்தார். அவர் அருகில் கிடந்த கம்பால் காளிராஜை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதனால் பயந்து போன சரத்குமார் தப்பி ஓடிவிட்டார்.

சிறிது நேரத்தில் மகாராசன் வீட்டு வந்தார். ரத்தவெள்ளத்தில் காளிராஜ் கிடப்பதை பார்த்து அலறினார். அக்கம்பக்கத்தினர் திரண்டு சென்று அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயராஜ், கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருசந்திர வடிவேலு மற்றும் போலீசார் சம்பவ வீட்டுக்கு விரைந்து சென்று, காளிராஜ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story