நெடுஞ்சாலைத்துறை பணிக்காக நிலம் கொடுத்தவர்கள் ஆர்ப்பாட்டம்
தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் தாசில்தார், திருப்புவனம் தாசில்தார் ஆகியோரை கண்டித்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருப்புவனம்,
மதுரை–பரமக்குடி 4 வழிச்சாலை பணிக்காக நிலம் கொடுத்தோர் கூட்டமைப்பு சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் தாசில்தார், திருப்புவனம் தாசில்தார் ஆகியோரை கண்டித்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரியண்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 2012–ல் அரசு வழிக்காட்டு மதிப்பை தமிழக அரசு உயர்த்திஉள்ளது. இதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. நிலம் கொடுத்தவர்களின் கருத்தை கேட்டுவிட்டு விலையின் முடிவை அதிகாரிகளே எடுத்துக்கொண்டனர். நிலத்திற்கு எங்களிடம் இறுதியான விலை என்று கூறி அதன் மேல் சம்மதிக்கவோ, மறுக்கவோ எங்களுக்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை. கடந்த 2012–ல் நிலத்தை கையகப்படுத்துவதாக அறிவித்து 2015–ம் ஆண்டு இறுதியில் பணம் பட்டுவாடா செய்தனர். 4 ஆண்டுகால இடைவெளியில் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாததால் நிலம் கொடுத்தவர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுஉள்ளது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் முருகப்பா, பாலு, துரைபிச்சை, அப்துல்ரகுமான், திரவியம்பிள்ளை உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் காத்தமுத்து நன்றி கூறினார்.