ராமேசுவரம் தீவு பகுதியில் மீண்டும் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு


ராமேசுவரம் தீவு பகுதியில் மீண்டும் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு
x
தினத்தந்தி 23 Jun 2018 3:45 AM IST (Updated: 23 Jun 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் தீவு பகுதியில் மீண்டும் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. மதுரை பயணிகள் ரெயில் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவுப்பகுதிக்கு உட்பட்ட ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கடலில் ராட்சத அலைகள் சீறிப்பாய்கின்றன. பாம்பன் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் காற்று வீசியதால் கடந்த சில நாட்களாக மதுரை-ராமேசுவரம் ரெயில் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து மதுரைக்கு இயக்கப்பட்டது.

இதன் இடையே நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் காற்றின் வேகம் குறைந்திருந்தது. இதனால் ரெயில்கள் வழக்கம்போல ராமேசுவரம் வரை சென்று வந்தன.

இந்த நிலையில் நேற்று மீண்டும் சூறாவளி காற்று வீசத்தொடங்கியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் நேற்று மாலை மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரெயில் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து மதுரைக்கு இயக்கப்பட்டது. ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு 5 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 7.25 மணிக்கும் இரவு 8.10 மணிக்கு புறப்படும் சேதுஎக்ஸ்பிரஸ் ரெயில் 8.25 மணிக்கும் தாமதமாக புறப்பட்டு சென்றன.

தனுஷ்கோடி பகுதியில் பலத்த காற்று காரணமாக சாலையை மணல் மூடியது. இதனால் வாகனங்கள் சென்றுவர மிகவும் சிரமம் இருந்து வருகிறது. இதையடுத்து தனுஷ்கோடி செல்லும் வாகனங்கள் அனைத்தும் கம்பிப்பாடு பகுதியில் நிறுத்தப்பட்டன. கடற்கரை பகுதியில் உள்ள குடிசை வீடுகள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மேற்கூரைகள் பறந்து சென்றன.

வழக்கமாக சனிக்கிழமை மீனவர்கள் கடலுக்கு செல்வது வழக்கம். தற்போது வீசும் பலத்த காற்று காரணமாக அவர்கள் கடலுக்கு செல்வார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இருப்பினும் இன்று (சனிக்கிழமை) காற்றின் வேகத்தை பொறுத்து அவர்கள் கடலுக்கு செல்வது முடிவு செய்யப்படும் மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story