குடும்பத்தகராறு: குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தாய்–மகள் தற்கொலை


குடும்பத்தகராறு: குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தாய்–மகள் தற்கொலை
x
தினத்தந்தி 23 Jun 2018 4:30 AM IST (Updated: 23 Jun 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த தாய் தனது மகளுடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள சடையன்வலசை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 37). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி முத்துமாரி(33). இவர்களுடைய மகள் தீபிகா(7), மகன் தினேஷ்(5).

தீபிகா அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தாள். மகேந்திரன் வேலைக்கு சரிவர செல்லாமலும், குடும்பத்தை கவனிக்காமலும் இருந்து வந்துள்ளார்.

இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு ஏற்படுவதற்கான முழுமையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. தன்னையும், குழந்தைகளையும் கவனிக்காமல் கணவன் இருந்து வருவதால் குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியவில்லையே என்று முத்துமாரி கவலையில் இருந்து வந்தார். சிறுமி தீபிகா ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் படிக்க வைக்க முடியாததால் அங்கிருந்து மாற்றி வந்து அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இதுபோன்ற வறுமை மற்றும் குடும்பத்தில் தினமும் தகராறு போன்ற காரணங்களினால் முத்துமாரி செய்வதறியாது திகைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுஉள்ளது. அதனை பொருட்படுத்தாமல் மகேந்திரன் வெளியில் சென்றுவிட்டாராம்.

இதனால் மனமுடைந்த முத்துமாரி இனியும் கஷ்டத்துடன் வாழ்வதில் பயனில்லை. தற்கொலை செய்து கொள்வோம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதன்படி முத்துமாரி குளிர்பானத்தில் பூச்சி மருந்து (வி‌ஷம்) கலந்து முதலில் தனது மகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். மகனுக்கு கொடுக்க முயன்ற போது அவன் விளையாடுவதற்காக வெளியில் ஓடிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சிறுமி தீபிகா மட்டும் தாய் கொடுக்கும் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்திருப்பது தெரியாமல் விரும்பி குடித்துள்ளார். சில நிமிடங்களில் தாயும், மகளும் உயிருக்கு போராடி துடித்துள்ளனர். தண்ணீர் தாகம் எடுத்த நிலையில் தண்ணீருக்காக பரிதவித்து கத்தியுள்ளனர்.

இவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் தாயும், மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விளையாட சென்றதால் சிறுவன் தினேஷ் மட்டும் இதில் இருந்து தப்பித்துள்ளான். இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story