8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு: மக்கள் விரும்பாத திட்டங்களை அரசு செயல்படுத்தக்கூடாது டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, மக்கள் விரும்பாத திட்டங்களை அரசு செயல்படுத்தக்கூடாது என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்
தென்காசி,
8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, மக்கள் விரும்பாத திட்டங்களை அரசு செயல்படுத்தக்கூடாது என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தினார்.
நீதி வெல்லும்குற்றாலத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும். நீதி வெல்லும். அப்போது எடப்பாடி பழனிசாமி அரசு முடிவுக்கு வந்து விடும். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய முடியவில்லை. ஆனால், மக்களுக்காக போராடிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்கிறார்கள். அதேபோன்று எங்கள் கட்சியைச் சார்ந்த சரவணனையும் எந்த காரணமும் இல்லாமல் கைது செய்துள்ளனர்.
8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்புமத்திய அரசு என்ன கூறுகிறதோ, அதனை ஒரு அடிமை போன்று தமிழக அரசு செய்கிறது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்று கூறுகிறார். அப்படியென்றால் அவர் மத்திய அரசிடம் கூறி, மாநில அரசை கலைக்க சொல்ல வேண்டியதுதானே?
சேலம்– சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை மக்கள் ஏற்று கொள்ளவில்லை. இயற்கையை அழித்து மக்களை பாதிக்கப்பட செய்து, இந்த திட்டம் கொண்டு வரப்பட வேண்டுமா?. இதற்கு மாற்று வழி குறித்து ஆய்வு செய்ய வேண்டும். முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 மணி நேரத்தில் சென்னை செல்வதற்காகவா இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது?. அவ்வளவு வேகமாக செல்ல வேண்டிய அவசரம் என்ன?.
மக்கள் விரும்பாத திட்டம்மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக போராடினால், சமூக விரோதிகள் என்பதா?. முதல்– அமைச்சரின் தொகுதி மக்களே, அவருக்கு எதிராக போராடுகிறார்கள். நான் அங்கு செல்லவில்லை. நான் அங்கு சென்றால், மக்களை தூண்டி விடுகிறேன் என்பார்கள். 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, மக்கள் விரும்பாத திட்டங்களை அரசு செயல்படுத்தக்கூடாது. மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். யோகா மட்டும் செய்தால் போதாது.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.
அப்போது அ.ம.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா மற்றும் பலர் உடன் இருந்தனர்.