ஆற்காடு அருகே கார் மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது: பெண் பலி
ஆற்காடு அருகே கார் மோதி மோட்டார்சைக்கிள் தீப்பிடித்தது. இதில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆற்காடு,
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 32), இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி செல்வதற்காக நேற்று காலை 11 மணியளவில் காரில் வந்தார். காரை சந்தோஷ் ஓட்டினார்.
ஆற்காடு அருகே வேப்பூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திமிரியை அடுத்த ஆயிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி (29) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார். அதில் அவரது உறவினர்களான ஆயிரமங்கலத்தை சேர்ந்த சின்னப்பொண்ணு (50), வேப்பூரை சேர்ந்த தரணி (24) ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்தபோது சந்தோஷ் ஓட்டி வந்த கார் இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த சத்தத்துடன் மோட்டார்சைக்கிள் தூக்கி வீசப்பட்டதில் சுமார் 20 அடி தூரம் வரை சாலையில் தேய்த்தபடி சென்றது. மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது திடீரென மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. காரின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்தது.
சாலையில் எதிர்திசையில் வேலூரில் இருந்து, ராணிப்பேட்டை நோக்கி வாகனங்களில் வந்தவர்கள் விபத்தை வேடிக்கை பார்த்தபடி சென்றனர். அப்போது வேலூரில் இருந்து வந்த கார் முன்னால் சென்ற லாரி மீது லேசாக மோதியது. அதே நேரத்தில் காருக்கு பின்னால் வந்த மோட்டார்சைக்கிளும் கார் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் தர்மபுரியில் இருந்து, காஞ்சீபுரம் சென்ற அரீஷ் (30), விமலா (35) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் விபத்துகளில் படுகாயம் அடைந்த 5 பேரையும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சின்னப்பொண்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அரீஷ், விமலா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலாஜியும், தரணியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு அருகே வேப்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற வசிஸ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் கோவிலுக்கு வருவோர் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் உயிர்ச்சேதம் மற்றும் கை, கால் முறிவு ஏற்படுகின்றன.
விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்கக்கோரி இப்பகுதி மக்கள் கலெக்டர் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்களிடம் மனு அளித்தும் இது வரை மேம்பாலம் அமைக்கப்படவில்லை. பல்வேறு காலகட்டங்களில் வேப்பூர் பகுதி மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேப்பூரில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story