ஆரணியில் நூதன முறையில் பெண்ணிடம் 15 பவுன் நகை பறித்த போலி மந்திரவாதி, வீட்டில் சிறை வைத்து விட்டு தப்பி ஓட்டம்
ஆரணியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 15 பவுன் நகையை பறித்துக்கொண்டு வீட்டில் சிறை வைத்து தப்பிய போலி மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணி,
ஆரணி கொசப்பாளையம் சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவரது மகள் கவுதமிக்கும் (வயது 27), வடுகசாத்து கிராமத்தை சேர்ந்த அய்யப்பனுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கனிஷ்கா (3), மித்ரா (2) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அய்யப்பன் கட்டிட மேஸ்திரியாக உள்ளார்.
கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கவுதமி, கணவனை பிரிந்து அவரது தாய் பச்சையம்மாள் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று பச்சையம்மாள் கூலி வேலைக்கு சென்று விட்டார். கவுதமி மட்டும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார்.
அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் கவுதமி வீட்டுக்கு வந்தார். அவர் கவுதமியிடம், தான் மந்திரவாதி என்றும், பச்சையம்மாள் தன்னை அனுப்பியதாகவும், கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதால் கணவருடன் சேர்ந்து வாழ மந்திரம் போட வந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.
இதனை நம்பிய கவுதமி அந்த நபரை வீட்டுக்குள் அழைத்து சென்றார். பின்னர் ஒரு சொம்பு மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து வர கூறினார். அதனை கவுதமி எடுத்து வந்து கொடுத்தார். சொம்பில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனை எடுத்து உச்சந்தலையில் தேய்க்க கூறினார். கவுதமி எண்ணெய் எடுத்து தலையில் தேய்த்தார்.
எண்ணெய் தேய்த்த பின்னர் கவுதமி சுய நினைவு இழந்தார். பின்னர் மர்ம நபர் வீட்டில் உள்ள நகைகளை கொண்டு வா என்று கூறியதும், பக்கத்து அறையில் இருந்த 15 பவுன் நகைகளை கொண்டு வந்து அவரிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிக்கொண்டு அந்த போலி மந்திரவாதி அங்கிருந்து வெளியே சென்று வீட்டின் வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டு சிறைவைத்து விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
சிறிதுநேரம் கழித்தவுடன் கவுதமிக்கு சுயநினைவு வந்தது. அப்போது தான், மந்திரவாதி என்று கூறிய நபர் 15 பவுன் நகைகளை ஏமாற்றி பறித்துக் கொண்டு சென்றது அவருக்கு தெரிய வந்தது.
பின்னர் அவரது சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து வீட்டின் தாழ்ப்பாளை திறந்தனர். இதுகுறித்து கவுதமி ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணியில் பட்டப்பகலில் நூதன முறையில் பெண்ணிடம் 15 பவுன் நகைகளை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story