கோத்தகிரி அருகே பஸ் நிறுத்த நிழற்குடையில் குட்டியுடன் ஓய்வெடுத்த கரடி
கோத்தகிரி அருகே பஸ் நிறுத்த நிழற்குடையில் குட்டியுடன் கரடி ஓய்வெடுத்து கொண்டிருந்தது. இதை கண்ட பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள காவிலோரை, கேர்கம்பை, காக்காசோலை உள்ளிட்ட கிராமங்களில் 500–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதி மக்களின் முக்கிய தொழிலாக காய்கறி மற்றும் தேயிலை விவசாயம் ஆகும். அதிலும் பெரும்பாலான விவசாயிகள் மேரக்காய், பீன்ஸ், முட்டைகோஸ், உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகளை ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். உணவு தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டெருமைகள், கரடிகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் நடமாடி வருகின்றன. மேலும் அவ்வப்போது வனவிலங்குகள் தாக்குதலால் மனிதர்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் வழக்கமாகி விட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை காவிலோரை, கேர்கம்பை மற்றும் காக்காசோலை ஆகிய கிராம சாலைகள் இணையும் சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு பயணிகள் சென்றனர். அப்போது அங்குள்ள நிழற்குடையில் குட்டியுடன் கரடி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து கரடிகளை விரட்டியடித்தனர். பின்னர் அந்த கரடிகள் சற்று தொலைவில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றன.
அதைத்தொடர்ந்து அரவேனுவில் இருந்து அளக்கரை செல்லும் சாலையை குட்டியுடன் அந்த கரடி கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக சென்ற மாணவர்கள் தங்களது செல்போனில் கரடிகளை படம் பிடித்தனர். இதனால் ஆவேசமடைந்த தாய் கரடி திடீரென மாணவர்களை துரத்தியது. உடனே அவர்கள் அங்கிருந்து ஓடிய கரடியின் தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்தனர். அதன்பின்னர் கரடிகள் மீண்டும் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொத்தமொக்கை கிராம பகுதியில் தேயிலை பறிக்க சென்ற கணவன்– மனைவி கரடி தாக்கி உயிரிழந்தனர். மேலும் அந்த கரடியை பிடிக்க சென்ற வனத்துறையினரும் தாக்குதலில் காயமடைந்ததால், அந்த கரடி சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோத்தகிரி, கார்சிலி, நெடுகுளா, குருக்கத்தி, அளக்கரை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, ஜக்கனாரை, மூன்ரோடு, கேசலாடா, காவிலோரை உள்ளிட்ட கிராமங்களில் சமீப காலமாக தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது. எனவே கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டவோ அல்லது கூண்டு வைத்து பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.