கோவை தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன
கோவை தனியார் மருத்துவமனையில் பெண் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன.
இடிகரை,
நீலகரி மாவட்டம் கோத்தகிரி கடைக்கப்பட்டியைச் சேர்ந்த மாதன் என்பவரின் மகன் விவேக் (வயது 32). இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அல்லிமுத்து என்பவரின் மகள் வித்யாவுக்கும் (வயது 25) கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமாகி 3 வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கோவை துடியலுரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்தனர். அங்கு மேற்கொண்ட சிகிச்சையின் பலனாக வித்யாவிற்கு குழந்தை பேறு உருவானது. 3 மாதம் ஆன நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது 3 கருக்கள் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இது போன்ற நிகழ்வுகளின் போது 3 கருக்களை ஊசி மூலம் 2 கருக்களாக மாற்றி இரட்டைக் குழந்தைகளாக பிறக்க வைப்பது வழக்கம். இதன் காரணமாக மருத்துவர்கள் 3 குழந்தைகளையும் கருவில் வளர்ப்பதில் சிக்கல்கள் இருப்பதை தம்பதியருக்கு தெரிவித்தனர். இருந்தபோதிலும் விவேக்–வித்யா தம்பதியினர் 3 குழந்தைகளையும் பெற்றுக்கொள்ள விரும்பினர். அதன் காரணமாக ஒவ்வோரு நாளும் மிகவும் சிரமத்துடன் கடந்தனர். இந்த நிலையில் கடந்த 15–ம் தேதி டாக்டர்கள் கீதா, மதனகோபால், சகிகுமார், ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு இல்லாததால் அறுவை சிகிச்சை (சிசேரியன்) முறையில் 3 ஆண் குழந்தைகளை வெளியே எடுத்தனர். பிறந்த 3 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது போன்று 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே ஒரே நேரத்தில் 3 கருக்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. கருவில் வளரும் 9 மாதங்களும் தாய்க்கும் குழந்தைகளுக்கும் மிகவும் சோதனையான காலமாகும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து தம்பதியனர் கூறும்போது, எங்கள் குழந்தைகள் மிகவும் நலமுடன் உள்ளனர். அவர்களை வளர்த்து ஆளாக்குவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வோம். இந்த குழந்தைகள் பிறந்துள்ளது எங்களுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.