காட்டு பன்றிகளிடம் இருந்து விவசாய பயிர்களை காப்பாற்ற வேண்டும், விவசாயிகள் வலியுறுத்தல்


காட்டு பன்றிகளிடம் இருந்து விவசாய பயிர்களை காப்பாற்ற வேண்டும், விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jun 2018 4:15 AM IST (Updated: 23 Jun 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

காட்டுப்பன்றிகளிடம் இருந்து விவசாய பயிர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

அப்போது விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதும், அதற்கு கலெக்டர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:–

விவசாயி சின்னத்தம்பி:– ரெட்டணை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.

கலெக்டர்:– கடந்த 2016–17–ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் கடந்த வாரம் ரூ.18 கோடி பெறப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 17 கோடி ரூபாய் 2 வாரத்திற்குள் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து வர உள்ளது. அந்த தொகை கிடைக்கப்பெற்றதும் உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

விவசாயி துளசிராமன்:– சங்கராபுரம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை உடனே வழங்க வேண்டும்.

கலெக்டர்: அரசிடம் இருந்து நிதி வரப்பெற்றதும் விரைவில் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயி கலிவரதன்:– விழுப்புரம் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் கரும்பு, நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் சேதமடைந்து வருகிறது. விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தி, விவசாய பயிர்களை காப்பாற்ற வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதே கோரிக்கையை கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

கலெக்டர்:– விவசாயிகளை அலைக்கழிப்பு செய்யாமல் இன்னும் 15 நாட்களுக்குள் நஷ்ட ஈட்டு தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற வனத்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி சுந்தரமூர்த்தி:– தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை இன்னும் தராமல் பாக்கி வைத்துள்ளனர். குறிப்பாக கலையநல்லூர் சர்க்கரை ஆலை ரூ.19 கோடியும், முண்டியம்பாக்கம் ஆலை ரூ.23 கோடியும் பாக்கி வைத்துள்ளது. அவற்றை உடனே விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது ஆலையை சீல் வைக்க வேண்டும்.

கலெக்டர்: கரும்பு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேளாண் உதவி இயக்குனர் மூலம் சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலைகளுக்கு ஏற்கனவே நோட்டீசு கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நிலுவைத்தொகையை பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயி கலியமூர்த்தி:– ஏரிகளில் வண்டல் மண் எடுக்க சென்றால் திருட்டுத்தமான மண் எடுக்கிறார்கள் என்று கருதி வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர்.

கலெக்டர்: இன்னும் 2 மாதத்தில் மழைக்காலம் வந்துவிடும். அதற்கு முன்பாகவே விவசாய பயன்பாட்டிற்காக எவ்வளவு வண்டல் மண் எடுக்க முடியுமோ அவ்வளவு வண்டல் மண்ணை, தாசில்தார்களிடம் முறையாக அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளுங்கள்.

விவசாயி ராஜகோபால்:– செங்கணாங்கொல்லை கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் துணை மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கலெக்டர்: விரைவில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி ஜெயராமன்:– கணையார் கிராமத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க பொதுப்பணித்துறையினர் கண்காணிக்க வேண்டும்.

கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி முருகன்:– செ.புதூர், நங்காத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தெளிப்புநீர் பாசனம் கேட்டு 30–க்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பம் கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் தெளிப்பு நீர் பாசன வசதி செய்து கொடுக்கவில்லை. அதுபோல் ஏராளமான விவசாயிகள் விவசாய மின் இணைப்பு கேட்டு பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். ஒரு தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை வரும்போதுதான் மின் இணைப்பு கிடைக்கிறது. குறைந்தது 5 ஆண்டுக்குள் மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கலெக்டர்: ஒரு வாரத்திற்குள் தெளிப்பு நீர் பாசன வசதி கிடைக்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் விரைவில் விவசாய மின் இணைப்பும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி அன்புமணி:– பின்னல்வாடி கிராமத்தில் 5 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. உடனே தண்ணீர் பிரச்சினையை போக்க வேண்டும். பின்னல்வாடி– வீரமங்கலம் இடையே செல்லும் சாலை படுமோசமாக இருப்பதால் பள்ளி மாணவ– மாணவிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறோம். உடனே அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

கலெக்டர்: ஓரிரு நாளில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். அரசிடம் நிதி பெற்று சாலையை சீரமைக்கவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story